Enable Javscript for better performance
ஏரேட்டர் கருவியைப் பயன்படுத்தி 40 சதவீதம் தண்ணீரைச் சேமிக்கலாம்: இந்திய பிளம்பர் சங்கம் யோசனை- Dinamani

சுடச்சுட

    

    ஏரேட்டர் கருவியைப் பயன்படுத்தி 40 சதவீதம் தண்ணீரைச் சேமிக்கலாம்: இந்திய பிளம்பர் சங்கம் யோசனை

    By DIN  |   Published on : 25th July 2019 09:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏரேட்டர் பயன்படுத்துவதின் மூலமாக 40 சதவீதம் அளவுக்கு தண்ணீரைச்சேமிக்க முடியும் என இந்திய பிளம்பர் சங்கத்தின் கோவை கிளைத் தலைவர் டி.மாணிக்கம் தெரிவித்துள்ளார். 
    இதுகுறித்து அவர் கோவையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: 
    இந்திய பிளம்பர் சங்கம், தனது நீர் மேலாண்மைப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கோவையில் இந்த ஆண்டில் 130 கோடி லிட்டர் தண்ணீரை சேமிக்க உறுதி கொண்டுள்ளது.  பருவமழை தவறியதால் பல ஆண்டுகளுக்குப் பின் கோவை மாநகரம் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது. நீர் நிலைகள் வறண்டுள்ளன. எனவே, இந்திய பிளம்பர் சங்கத்தின் சார்பில் நீரை சேமிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். கோவை நகரின் தற்போதைய தண்ணீர்த் தேவை நாளொன்றுக்கு 247 மில்லியன் லிட்டராக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இது 25 சதவீதம் உயரும். கிராமப்புறங்களில் தற்போது 800 முதல்1000 அடிக்கும் மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்துத் தண்ணீர் பெற வேண்டிய  சூழ்நிலை உள்ளது. தண்ணீரைச் சேமிக்க மக்கள் ஏரேட்டர் கருவியைப் பயன்படுத்த வேண்டும். இந்தக் கருவி, குழாய்களில் பொருத்தப்படுவதன் மூலமாக, கருவியில் உள்ள துளைகளுக்குள் ஊடுருவிச் செல்லும் காற்று 
    குழாயில் இருந்து வெளியேற்றும் தண்ணீரை நுரை பொங்க வெளியேற்றுகிறது. அப்போது, தேவைக்கும் அதிகமான தண்ணீர் வீணாவது தவிர்க்கப்படுகிறது. இதனால் 40  சதவீதம் அளவுக்குத் தண்ணீரைச் சேமிக்க முடியும். இந்தக் கருவியை எளிதாகப் பொருத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக கோவையில் மட்டும் 130 கோடி லிட்டர் தண்ணீரைச் சேமிக்க  முடியும். தண்ணீரைச் சிக்கனமாக சேமிப்பதை உறுதிப்படுத்த மின் சிக்கனத்துடன் இயங்கும் மோட்டார்களையும் அறிமுகப்படுத்தி உள்ளோம் என்றார். 
    இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய பிளம்பர் சங்கத்தின் கோவைக் கிளைச் செயலாளர் கே.ஆர்.பிரசாத், இணைச் செயலாளர் கே.குமார், முன்னாள் தலைவர் கோபிநாத், சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai