Enable Javscript for better performance
நாய்கள் பாதுகாப்பு மையத்தில் தேசிய விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    நாய்கள் பாதுகாப்பு மையத்தில் தேசிய விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 25th July 2019 09:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, துடியலூர் அருகே செயல்பட்டு வரும் சினேகாலயா நாய்கள் பாதுகாப்பு மையத்தில் தேசிய விலங்குகள் நலவாரிய அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    கோவை, துடியலூர் அருகேயுள்ள செல்வபுரத்தில் சினேகாலயா விலங்குகள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தை தொடங்கிய கீதாராணி பராமரிப்பில்லாமல் சுற்றித்திரியும் தெருநாய்கள், வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட நாய்களை தன் சொந்த செலவில் மையத்தில் வைத்து பராமரித்து வந்தார். இங்கு 400-க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. அனைத்து நாய்களும் மிகவும் ஆரோக்கியமான முறையில் வளர்க்கப்பட்டு உணவும் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இம்மையத்தின் உரிமையாளரான கீதாராணி சமீபத்தில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நாய்களின் பராமரிப்பு கேள்விக்குறியானது. இந்நிலையில் சினேகாலயா விலங்குகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் நாய்களை மாநில, மாவட்ட விலங்குகள் நல அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். நாய்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள், அவற்றுக்கு அளிக்கப்படும் உணவுப்பொருள்கள், அங்கு கடைப்பிடிக்கப்படும் சுகாதாரம் குறித்தும் கேட்டறிந்தனர். 
    இது தொடர்பாக தேசிய விலங்குகள் நலவாரிய மாநில அதிகாரி கல்பனா வாசுதேவன் கூறியதாவது: 
    சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள், விபத்துகளில் சிக்கிக்கொண்ட மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட  நாய்கள் என  400-க்கும் அதிகமான நாய்கள் இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாய்களைப் பராமரித்து வந்த மையத்தின் உரிமையாளர் இறந்து விட்டதால் நாய்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மையத்தில் பராமரிக்கப்பட்டும் வரும் நாய்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளன. அவை வசிக்கும் இடமும் சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட்டு வருகின்றது. 
    தொடர்ந்து பாதுகாப்பு மையத்தை அதன் பொறுப்பாளர்கள் நடத்த உள்ளதாக உறுதி தெரிவித்துள்ளனர். அனைத்து உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர். அதுவரை நாய்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை மத்தம்பாளையம் அரசு கால்நடை மருத்துவர் தன்ராஜ் கவனித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். 
    இதில் தேசிய விலங்குகள் நல வாரிய மாவட்ட அதிகாரி பிரதீப் பிரபாகரன், மத்தம்பாளையம் கால்நடை  மருத்துவர் தன்ராஜ், நலம் அறக்கட்டளை நிறுவனர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai