முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
நகை பறிப்பு, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
By DIN | Published On : 30th July 2019 08:27 AM | Last Updated : 30th July 2019 08:27 AM | அ+அ அ- |

கோவையில் நகை பறிப்பு, திருட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட தொடர் குற்றங்களில் ஈடுபட்ட நபரை போத்தனூர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
கோவை, வெள்ளலூர், அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் இவர் கடந்த 16ஆம் தேதி உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மறுநாள் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.1.07 லட்சம் ரொக்கம், ஒன்றரைக் கிலோ வெள்ளிப் பொருள்கள், 35 பட்டுப் புடவைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ்குமார் போத்தனூர் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் லலிதா (68) என்ற மூதாட்டியிடம் கடந்த ஜூன் மாதம், இரண்டரைப் பவுன் நகைப் பறித்தச் சம்பவம் தொடர்பாக செல்லப்பாண்டி (42) என்பவரை குனியமுத்தூர் போலீஸார் சில நாள்களுக்கு முன் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வெள்ளலூரில் சுரேஷ்குமாரின் வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்கள் திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சுரேஷ்குமாரின் வீட்டில் திருடப்பட்ட 12 பட்டுப் புடவைகள், சில வெள்ளிப் பொருள்களை போலீஸார் மீட்டனர். மேலும் போத்தனூர் போலீஸாரும் சுரேஷ் குமாரை கைது செய்து விசாரித்தனற். இதில் செல்லப்பாண்டியும், அவரது நண்பர் ரத்தினபுரியைச் சேர்ந்த ஷேக் பக்ருதீனும் (42) சேர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள ஷேக் பக்ருதீனை போலீஸார் தேடி வருகின்றனர்.