அகில இந்திய கூடைப்பந்து போட்டி: ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் வருமான வரித் துறை, இந்தியன் வங்கி அணிகள்

கோவையில் நடைபெற்று வரும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான 54-ஆவது ஆடவர் கூடைப்பந்து

கோவையில் நடைபெற்று வரும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான 54-ஆவது ஆடவர் கூடைப்பந்து போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்னை வருமான வரித்துறை, இந்தியன் வங்கி அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதேபோல், சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 18-ஆவது மகளிர் கூடைப்பந்து இறுதிப் போட்டிக்கு தென் மத்திய ரயில்வே, தெற்கு ரயில்வே அணிகளும் தகுதி பெற்றுள்ளன.
கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், ஆடவர் பிரிவில், சென்னை வருமான வரி அணி, தில்லி இந்திய ரயில்வே அணி, இந்திய ராணுவம், கர்நாடக பரோடா வங்கி, லோனாவாலா இந்திய கடற்படை அணி, சென்னை இந்தியன் வங்கி, தில்லி இந்திய விமானப் படை அணி, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய 8 அணிகள் பங்கேற்ற நிலையில், அரையிறுதிப் போட்டிக்கு இந்திய விமானப் படை, இந்திய ராணுவம், இந்தியன் வங்கி, சென்னை வருமான வரித் துறை ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றன.
அரையிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. முதலாவது அரையிறுதியில் சென்னை வருமான வரித் துறை, இந்திய விமானப் படை அணிகள் மோதின. இதில், வருமான வரித் துறை அணி 69 - 64 என்ற புள்ளிகள் கணக்கில் விமானப் படை அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது. வருமான வரித் துறையின் ஜீவா 27 புள்ளிகளையும், சிவபாலன் 22 புள்ளிகளையும், அகிலன் 10 புள்ளிகளையும் சேர்த்து வெற்றிக்கு உதவினர். விமானப் படை தரப்பில் ஜோகிந்தர் சிங் 24 புள்ளிகளையும், பிரவேஷ் 14 புள்ளிகளையும் சேர்த்தனர்.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய ராணுவம், இந்தியன் வங்கி அணிகள் மோதின. இதில் இந்தியன் வங்கி அணி 77 - 60 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ராணுவ அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத்  தகுதி பெற்றது. இந்தியன் வங்கி தரப்பில் வீரர் ஹரிராம் அதிகபட்சமாக 19 புள்ளிகளை சேர்த்தார். ராணுவ அணியின் வீரர் கோபால் ராம் அதிகபட்சமாக 22 புள்ளிகள் சேர்த்தார். இதையடுத்து சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வருமான வரித் துறை, இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன.
சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான 18-ஆவது மகளிர் கூடைப்பந்து போட்டிகளில் ஹூப்ளி தென்மேற்கு ரயில்வே அணி, செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே, கேரள காவல் துறை, அரைஸ் ஸ்டீல்ஸ், கொல்கத்தா கிழக்கு ரயில்வே, கேரள மாநில மின்சார வாரியம், தெற்கு ரயில்வே, கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி ஆகிய 8 அணிகள் பங்கேற்றன.
இதில், தென் மத்திய ரயில்வே,  தெற்குரயில்வே, அரைஸ் ஸ்டீல்ஸ், கேரள மாநில மின்வாரிய அணி ஆகிய 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் தென் மத்திய ரயில்வே, கேரள மாநில மின்வாரிய அணிகள் மோதின. இதில், தென் மத்திய ரயில்வே அணி 63 - 54 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மாநில மின்வாரிய அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத்  தகுதி பெற்றது. ரயில்வே தரப்பில் குலாப்ஸா 23 புள்ளிகளையும், திவ்யா 19 புள்ளிகளையும் சேர்த்தனர். மின்வாரியம் தரப்பில் அஞ்சனா 18 புள்ளிகளையும், ஸ்டெப்பி 11 புள்ளிகளையும் சேர்த்தனர்.
இரண்டாவது அரையிறுதியில்  தெற்கு ரயில்வே அணி 66 - 60 என்ற புள்ளிகள் கணக்கில் அரைஸ் ஸ்டீல்ஸ் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத்  தகுதி பெற்றது.  தெற்கு ரயில்வே அணியின் பிரியதர்ஷிணி 20 புள்ளிகளையும், அனிதா, மீனா லதா தலா 13 புள்ளிகளையும் சேர்த்தனர். அரைஸ் ஸ்டீல்ஸ் அணியின் சத்யா 15 புள்ளிகளையும், ஸ்ரீவித்யா 14 புள்ளிகளையும், புஷ்பா 10 புள்ளிகளையும் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில்  தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com