பேருந்தில் கஞ்சா கடத்திய முதியவர் கைது
By DIN | Published On : 09th June 2019 03:05 AM | Last Updated : 09th June 2019 03:05 AM | அ+அ அ- |

தேனியிலிருந்து பேருந்தில் இரண்டரை கிலோ கஞ்சா கடத்தி வந்த முதியவரை கோவை சரக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
தேனியில் இருந்து கோவை வரும் ஒரு பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை சரக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேனி மாவட்டத்தில் இருந்து கோவை வந்த பேருந்தில் இறங்கிய நபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் பேருந்து நிலையத்தில் சுற்றி வருவதைப் பார்த்தனர். இதையடுத்து போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களைத் தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரது கைப்பையை சோதனையிட்டனர். அதில், இரண்டரைக் கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். விசாரணையில் பிடிபட்டவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் (57) என்பது தெரியவந்தது. மேலும், கோவை இடையர்பாளையத்தில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ள அவர், அங்கிருந்து பலருக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து செல்வராஜை போலீஸார் கைது செய்தனர்.