அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளின் விவரத்தை வெளியிட வலியுறுத்தல்

கோவையில் அங்கீகாரம் பெற்று இயங்கும் தனியார் பள்ளிகள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கோவையில் அங்கீகாரம் பெற்று இயங்கும் தனியார் பள்ளிகள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும் என கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணிக்கு அனுப்பிய கடிதம்:
 பள்ளிக் கல்வி இயக்குநர் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியல் முதன்மைக் கல்வி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையிலும், நாளேடுகளிலும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்த நிலையில், கோவையில் அங்கீகாரம் பெறாமல் போலியாகச் செயல்படும் இளம் மழலையர் பள்ளிகள் 113 எனவும், மழலையர் மற்றும் துவக்கப்பள்ளிகள் 14, அங்கீகாரத்தை புதுப்பிக்கத் தவறிய பள்ளிகள் 14 என மொத்தமாக கோவை மாவட்டத்தில் 141 பள்ளிகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் விதிகளின்படி இயங்கவில்லை என்பது தெரியவந்தது.
 இதில் குறிப்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் இளம் மழலையர் பள்ளிகள் 12 என வட்டாரக் கல்வி அலுவலர் முதலில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சில நாள்களில் வெளியிடப்பட்ட குறிப்பில் இளம் மழலையர் பள்ளிகள் 17 எனக் குறிப்பிட்டுள்ளார். 
இவ்வாறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதால் கோவை மாவட்டத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற பள்ளிகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடும் வகையில் அறிவிக்க வேண்டும். இதேபோல பள்ளிக் கட்டடத்தின் உறுதித் தன்மைச் சான்று, தீ தடுப்புச் சான்று, சுகாதாரச் சான்று என அனைத்து தகவல்களும் வெளியிடப்பட வேண்டும். இதை போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்வது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com