சமையல் எரிவாயு உருளைகளுக்கு மின்னணு முறையில் பணம் வாங்க மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்

சமையல் எரிவாயு உருளைகளுக்கான தொகையை கையடக்கக் கருவி (ஸ்வைப்) மூலம் வாங்க மறுப்பவர்கள் மீது புகார்

சமையல் எரிவாயு உருளைகளுக்கான தொகையை கையடக்கக் கருவி (ஸ்வைப்) மூலம் வாங்க மறுப்பவர்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என்று நுகர்வோர் குறைகேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 சமையல் எரிவாயு நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வழங்கல் அலுவலர், குடிமைப்பொருள் வட்டாட்சியர்கள், சமையல் எரிவாயு முகவர்கள், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் லோகு, பாலகிருஷ்ணன், இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 இதில், சமையல் எரிவாயு உருளைகளுக்கான கட்டணத்தை மின்னணு முறையில் வழங்கலாம் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தாலும், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் நபர்கள் அந்தக் கருவிகளைக் கொண்டு வருவதில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. எரிவாயு விபத்துகளில் உயிரிழப்பவர்கள், காயமடைபவர்களின் குடும்பங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் இழப்பீடு குறித்த அறிவிப்பை எந்த நிறுவனமும் வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை. கோவையின் பல்வேறு பகுதிகளில் வீட்டு உபயோகத்துக்கான உருளைகள், சட்ட விரோதமாக வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படுகிறது என்பன உள்ளிட்ட புகார்களை நுகர்வோர்கள் தெரிவித்தனர்.
ஸ்வைப் கருவி மூலம் கட்டணம் செலுத்துவதில் உள்ள பிரச்னை குறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் மலர்விழி பேசும்போது, எங்களது நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் உருளைகளுக்கு ஸ்வைப் கருவி மூலமாக பணம் செலுத்தும் வசதி அமலில் இருப்பதாகவும், டெலிவரி செய்பவர்கள் யாரேனும் கருவி இல்லாமல் உருளை விநியோகத்துக்கு வந்தால் அது தொடர்பாக புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
 மேலும், மற்ற புகார்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் தெரிவித்தனர். அத்துடன், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு தொடர்பான புகார்களை 1906 என்ற எண் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com