நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: சிறுவாணி அணையில் நீர்மட்டம் உயர்வு

சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம்  5 செ.மீ. உயர்ந்துள்ளது. 

சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து ஒரு வாரமாக மழை பெய்து வருவதால், அணையின் நீர்மட்டம்  5 செ.மீ. உயர்ந்துள்ளது. 
கோவையின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையில் 22.47 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்குத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். ஜனவரியில் 868.50  மீட்டராக இருந்த சிறுவாணி 
அணையின் நீர்மட்டம் மார்ச் முதல் வெயில் வாட்டியதால் குறையத் தொடங்கியது. இதையடுத்து, ஏப்ரலில் தொடர்ந்து 5 நாள்கள் சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் 20 முதல் 30 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 869.40 மீட்டராக அதிகரித்தது. 
அதன் பிறகு கோடை மழை பொய்த்ததால், மே தொடக்கத்தில் அணையின் நீர்மட்டம் 864.30 மீட்டராகக் குறைந்தது. அணையில் உள்ள 4 வால்வுகளில் 3 வால்வுகள் வெளியே தெரிந்தன.  தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 863.30 மீட்டராகச் சரிந்தது. 
இந்நிலையில்,  சிறுவாணி அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரமடைந்தது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை 25 மி.மீ. மழையும், திங்கள்கிழமை 27 மி.மீ. மழையும், செவ்வாய்க்கிழமை 26, புதன்கிழமை 55, வியாழக்கிழமை 50 மி.மீட்டர் மழையும் பதிவானது. இதனால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரு வாரத்தில் 5 செ.மீ. உயர்ந்துள்ளது. 
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், சிறுவாணி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. முக்கிய நீராதாரமான முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உள்ளிட்ட அருவிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. செப்டம்பர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஒரு மாதத்தில் அணையின் நீர்மடடம் 890 மீட்டரை எட்டும் என எதிர்பார்க்கிறோம் என்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com