மின் வினியோக குளறுபடியால் உற்பத்தி இழப்பை சந்திக்கும் தொழிற்கூடங்கள்: டாக்ட் அமைப்பு புகார்

கோவையில் மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் சிறு, குறு தொழில்முனைவோர்கள் உற்பத்தி இழப்பை

கோவையில் மின்சார வாரியத்தின் குளறுபடிகளால் சிறு, குறு தொழில்முனைவோர்கள் உற்பத்தி இழப்பை சந்தித்து வருவதாக தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) குற்றஞ்சாட்டியுள்ளது.
 இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மின் பகிர்மான வட்டத்தின் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை நம்பி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். 
கோவையில் கடந்த சில நாள்களாக காற்றும், மழைச் சாரலும் இருந்து வரும் நிலையில், சற்று வேகமாக காற்று வீசினாலே உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரையிலும் மின்சாரம் கிடைப்பதில்லை. மாநகரம், புறநகரப் பகுதிகளில் சுழற்சி அடிப்படையில் இதுபோன்று மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டால் தொழில்நுட்ப ரீதியான பல்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். இவ்வாறு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நாளொன்றுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. பராமரிப்புப் பணிக்காகவே மாதத்தில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் தடைசெய்யப்படும் நிலையில், தற்போது பராமரிப்பு குளறுபடிகளாலேயே பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
 மின்வாரியத்தில் தரமான மின்சாதனங்களையும், கருவிகளையும் பயன்படுத்துவதுடன், இதுபோன்று அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதைத் தடுக்க தனியாக ஒரு பிரிவிவை ஏற்படுத்தி பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். தடையற்ற மின்சாரம் வழங்குவதில் குளறுபடிகள் நீடிக்குமானால் தொழில் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com