ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு: பொதுமக்கள் முற்றுகை: 100 பேர் கைது
By DIN | Published On : 19th June 2019 09:19 AM | Last Updated : 19th June 2019 09:19 AM | அ+அ அ- |

கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜீவா நகரில் ஆக்கிரமிப்பு வீடுகளின் மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையைக் கண்டித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜீவா நகரில் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து 252 வீடுகள் கட்டி, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 700க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், சாலையை விரிவாக்கம் செய்வதற்காக அங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, அப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக கீரணத்தம் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து, அப்பகுதியில் 132 வீடுகளில் வசித்தவர்கள், ஒதுக்கீடு உத்தரவைப் பெற்றுக் கொண்டனர். அதில் 72 வீடுகளில் வசித்து வந்தவர்கள் தங்களது வீடுகளைக் காலி செய்து கீரணத்தம் அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினர்.
60 வீடுகளில் வசித்து வந்தவர்கள் ஒதுக்கீடு உத்தரவைப் பெற்றுக் கொண்ட பிறகும், வீடுகளைக் காலி செய்யாமல் இருந்து வந்தனர்.
இதில் மீதமுள்ள 120 வீடுகளில் வசித்து வந்தவர்கள் ஒதுக்கீடு உத்தரவைப் பெறாமலும், வீடுகளைக் காலி செய்யாமலும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், குடியிருப்பு ஒதுக்கீடு உத்தரவைப் பெற்றுக் கொண்டும், வீடுகளை காலி செய்யாமலும் இருந்த 60 பேரின் வீடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அண்மையில் இடித்து அகற்றினர்.
மேலும், காலி செய்யாமல் இருந்த 120 வீட்டு உரிமையாளர்களை விரைவில் காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், 120 வீடுகளின் மின் இணைப்பைத் துண்டிப்பதற்காக நகரமைப்பு அலுவலர் ரவிசந்திரன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், குடிசை மாற்று வாரியத் துறையினர், மின் பகிர்மானத் துறையினர், தீயணைப்புத் துறையினர், நில அளவையாளர்கள் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை அப்பகுதிக்குச் சென்றனர்.
அப்போது, அங்கு திரண்டிருந்த வீட்டின் உரிமையாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்தனர். அதன் பிறகு 120 வீடுகள் மற்றும், ஏற்கனவே காலி செய்யப்பட்டிருந்த வீடுகள் என மொத்தம் 200 வீடுகளின் மின் இணைப்பை மின்சாரத் துறை ஊழியர்கள் துண்டித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவிசந்திரன் கூறுகையில், "வீடுகளை காலி செய்து, கீரணத்தம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் செல்லுமாறு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை அவகாசம் கொடுத்தும் காலி செய்யாததால், முதல் கட்டமாக 60 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
காலி செய்யாத 120 வீடுகள் மற்றும் ஏற்கெனவே காலி செய்யப்பட்டிருந்த 80 க்கும் மேற்பட்ட வீடுகளின் மின் இணைப்புகள் செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டன.
இதில் 120 வீடுகளில் வசிப்பவர்கள் ஒதுக்கீடு உத்தரவைப் பெற்றுக் கொண்டு காலி செய்து பிறகு அனைத்து வீடுகளும் இடிக்கப்படும் என்றார்.