பம்ப்செட் மூலப் பொருள்கள், உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: கோப்மா கோரிக்கை

மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், பம்ப்செட் மூலப் பொருள்கள், உதிரிபாகங்கள் மீதான ஜி.எஸ்.டி.யைக் குறைக்க வேண்டும்.

மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில், பம்ப்செட் மூலப் பொருள்கள், உதிரிபாகங்கள் மீதான ஜி.எஸ்.டி.யைக் குறைக்க வேண்டும்.
இது குறித்து சங்கத்தின் தலைவர் கே.மணிராஜ், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் மோட்டார் பம்ப்செட் உற்பத்தித் தொழில் தனிச்சிறப்பு வாய்ந்த தொழிலாக உள்ளது. மோட்டார் பம்ப்செட் அதன் உதிரிபாகங்கள் மீது நாடு முழுவதற்கும் 5 சதவீத வாட் வரி விதிக்கப்பட்டிருந்தது. அதேபோல், ரூ.1.50 கோடி வரை கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி.யில் இந்தத் தொழிலுக்கு 12 முதல் 28 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. குறுந்தொழில்கள் என்ற அடிப்படையில் வரி விதிப்பில் சலுகை காட்டப்படவில்லை.இதனால் ஜி.எஸ்.டி. விதிப்புக்கு பிறகு ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில்முனைவோர்கள் பொருளாதாரரீதியில் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். வரி விதிப்பின் மூலம் ஏற்படும் முதலீட்டுக் கடனின் பொருளாதார சுமையைத் தாங்க முடியாத என்ஜினீயரிங் தொழில் சார்ந்த குறுந்தொழில் முனைவோர்கள் பலர், இந்தத் தொழிலில் இருந்தே விலகிவிட்டனர்.
ஜவுளித் தொழில் துறையில், ஜாப் ஆர்டர்களுக்கு 5 சதவீதமாக ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ள நிலையில், என்ஜினீயரிங் துறை ஜாப் ஆர்டர்களுக்கு மட்டும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து ஜாப் ஆர்டர் செய்து கொடுக்கும் கைத்தொழில்களுக்கு வரிகள் எதுவும் விதிக்கப்பட்டதில்லை. எனவே, ஜாப் ஆர்டர்கள் மீதான வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். விவசாயத்துக்கும், குடிநீருக்கும் முக்கியக் கருவியாக விளங்கும் பம்ப்செட், உதிரி பாகங்கள் மீதான வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும். பெரு நிறுவனங்களுக்கும், சிறு நிறுவனங்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் எந்தவித வேறுபாடும் காட்டப்படவில்லை.
கடந்த காலங்களில் இது தொடர்பாக கோவையில் நடத்தப்பட்ட கருத்தாய்வுக் கூட்டங்களில் நாங்கள் பங்கேற்று எங்களது பல கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். ஆனால், அதில் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, எங்களது கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, வரும் பட்ஜெட் கூட்டத்திலோ அல்லது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திலோ உரிய அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com