போக்குவரத்து நெரிசலைக் குறைக்க குறிச்சி குளக்கரையில் தற்காலிக பேருந்து நிலையம்: மாநகராட்சி, காவல் துறை அதிகாரிகள் ஆய்வு

மேம்பாலம் கட்டும் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க குறிச்சி குளக்கரையில்

மேம்பாலம் கட்டும் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க குறிச்சி குளக்கரையில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, அந்த இடத்தை மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு  நடத்தினர். 
கோவை உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் ரூ.121 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த மேம்பாலப் பணி காரணமாக அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கில் அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. போக்குவரத்து மாற்றம் காரணமாக நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்களும் புட்டுவிக்கி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனால், அகலம் குறைவான புட்டுவிக்கி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் பேருந்துகள் சுமார் 10 கி.மீ.க்கு அதிகமாக சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதே நேரத்தில் மேம்பாலப் பணிகள் முடிவடைய ஓராண்டுக்கு மேலாகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரை உக்கடத்துக்கு மாற்றாக தற்காலிக பேருந்து நிலையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 
இதற்கு மாநகராட்சி மற்றும் காவல் துறை சார்பில் தகுதியான இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பொள்ளாச்சி சாலையில் உள்ள குறிச்சி குளக்கரை இதற்கு உகந்த இடமாக இருக்கும் எனக் கருதி மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத், மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், துணை ஆணையர் (போக்குவரத்து) பி.பெருமாள் ஆகியோர் அந்த இடத்தை திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கூறுகையில், பொள்ளாச்சி மார்க்கத்தில் இருந்து கோவை, உக்கடம் பேருந்து நிலையத்துக்கு வரும் அரசு, தனியார் பேருந்துகள் குறிச்சி குளத்தின் கரையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கும் வகையில் அங்கு தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்கு வசதியாக குறிச்சி குளக்கரையில் உள்ள பொங்காளியம்மன் கோயில் அருகே 600 மீட்டர் தூரத்துக்கு காலி இடம் உள்ளது. மேலும், இப்பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படும் பட்சத்தில் பயணிகளுக்கான குடிநீர், கழிப்பறை, சாலைத் தடுப்புகள் ஏற்படுத்தவும் மாநகராட்சிக்கு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வலியுறுத்தியுள்ளோம் என்றார். 
இத்திட்டம் குறித்து காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) பி.பெருமாள் கூறுகையில்,  தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு மாநகராட்சி நிர்வாகம், பொதுப் பணித் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகளுக்கு இக்கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிச்சி குளக்கரையில் போதுமான இடவசதி இருப்பதால், இங்கு ஒரே நேரத்தில் 15 பேருந்துகளை நிறுத்த முடியும். இங்கு தற்காலிக பேருந்து நிறுத்தம் ஏற்படுத்துவதால், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வரும் அரசு, தனியார் பேருந்துகள் உக்கடத்துக்கு வருவது தவிர்க்கப்படும். உக்கடத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்பு உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com