"மண் வளம் பாதுகாக்க தொழு, உயிர் உரங்களைப் பயன்படுத்த வேண்டும்'

தொழு, உயிர் உரங்களை சரியான அளவில் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள அங்ககச் சத்துக்களை மீட்டெடுக்கலாம்

தொழு, உயிர் உரங்களை சரியான அளவில் பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள அங்ககச் சத்துக்களை மீட்டெடுக்கலாம் என வேளாண் இணை இயக்குநர் பானுமதி தெரிவித்தார்.
கோவை வேளாண் பல்கலை.யில் மாநில அளவிலான மண்வள அட்டை இயக்க பணிமனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார், பதிவாளர் அ.சு.கிருஷ்ணமூர்த்தி,  தேனி மாவட்ட வேளாண் துணை இயக்குநர் அழகு நாகேந்திரன், கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.பானுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மண்வள அட்டையின் முக்கியத்துவம், பயன்கள், அங்ககச் சத்து மேலாண்மை, மண்ணுக்கேற்ற உரங்கள், சாகுபடி மேலாண்மை, தொழு மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து விளக்கப்பட்டன.
பணிமனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ்.பானுமதி பேசியதாவது:
மண்வள அட்டையில் விவசாயிகளின் நிலங்களில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு மண்ணில் உள்ள சத்துக்கள் குறித்த விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இறவைப் பாசன பகுதிகளில் 2.5 ஹெக்டருக்கு ஒரு இடத்திலும், மானாவாரி நிலங்களில் 10 ஹெக்டருக்கு ஒரு இடத்திலும் மண் மாதிரி எடுக்கப்படும்.
மண்வள அட்டையில் ஒவ்வொரு பருவத்திலும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் வகைகள், பரப்பளவு, அவற்றுக்கு வைக்க வேண்டிய உரங்கள், மேலும் அதன் அளவுகள் குறித்து குறிப்பிடப்படும்.
பெரும்பாலும் ரசாயன உரங்களைத் தவிர்த்து அங்கக மற்றும் உயிர் உரங்களே பயன்படுத்த விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. ரசாயன உரங்களின் அதீத பயன்பாட்டினால் 1980 ஆம் ஆண்டுகளில் 1. 26 சதவீதமாக இருந்த அங்கச்சத்தின் அளவு 2013-14 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் 0.68 சதவீதமாக குறைந்துள்ளது.
இதனால், மண்வளம் பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் கூடுதல் நீர்த் தேவை, சாகுபடி செலவும் அதிகரிக்கிறது. ஆனால், இயற்கை உரங்கள் பயன்பாட்டால் மண்ணின் வளத்தை மீட்டெடுத்து, உற்பத்திச் செலவை கட்டுப்படுத்த முடியும். ரசாயன உரங்களின் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள மண் வளத்தை தொழு, உயிர் உரங்களை சரியான அளவு பயன்படுத்துவதன் மூலம் மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். வேளாண் துறையால் வழங்கப்பட்டுள்ள மண்வள அட்டையில் குறிப்பிட்டுள்ள அளவு உரங்களை பயன்படுத்தினாலே குறைந்த செலவில் சிறப்பான மகசூலை பெறலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com