Enable Javscript for better performance
கணபதி - ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் பணி மந்தம்: ஒன்றரை ஆண்டுகளாகத் தொடரும் அவதி- Dinamani

சுடச்சுட

    

    கணபதி - ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் பணி மந்தம்: ஒன்றரை ஆண்டுகளாகத் தொடரும் அவதி

    By DIN  |   Published on : 21st June 2019 10:08 AM  |   அ+அ அ-   |    |  

    கோவை, ஆவாரம்பாளையத்தில் ரயில்வே உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருவதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணபதி - ஆவாரம்பாளையம் வழித்தடத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
    கோவை, ஆவாரம்பாளையம் ரயில்வே கேட் வழியாக தினமும் 70-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. 
    திருச்சி சாலை, அவிநாசி சாலையில் இருந்து லட்சுமி மில்ஸ் சிக்னல், மகளிர் பாலிடெக்னிக்  கல்லூரி வழியாக கணபதி மற்றும் சத்தி சாலைக்கு செல்பவர்கள் காந்திபுரம் செல்லாமல் ஆவாரம்பாளையம் லெவல் கிராஸிங் வழியாகச் சென்று வந்தனர்.
    காலை மற்றும் மாலை நேரங்களில்  காந்திபுரம் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, அவிநாசி சாலை மற்றும் கணபதியில்  இருந்து ஏராளமானோர் இந்த லெவல் கிராஸிங் வழியாகப் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். 
    இந்நிலையில், ரயில்கள் சென்று வரும் சமயங்களில் ஆவாரம்பாளையம் ரயில்வே கேட் அடிக்கடி திறந்து மூடப்பட்டதால் ரயில்வே கேட்டின் இருபுறங்களிலும் வாகன நெரிசலைத் தவிர்க்க முடியாத சூழல் இருந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆவாரம்பாளையம் லெவல் கிராஸிங் பகுதியில் ரயில்வே உயர்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். 
    மக்கள் கோரிக்கையை ஏற்று ஆவாரம்பாளையம் லெவல் கிராஸிங்கில் ரயில்வே உயர்மட்டப் பாலம் கட்ட  ரயில்வே நிர்வாகம் சார்பில் 2009 ஆம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.  ரூ. 26 கோடியில்  ரயில்வே உயர்மட்டப் பாலம் கட்ட  2011 ஆம் ஆண்டுஅடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு 2017 டிசம்பர் 17-ஆம் தேதி ரயில்வே கேட் மூடப்பட்டு இருபுறங்களிலும் பணி துவங்கியது. 20 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம் மற்றும் தரையில் இருந்து 6.5 மீட்டர் உயரத்தில் ரயில்வே உயர்மட்டப் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. 
    வழக்கமாக ரயில்வே பாலங்களில் தண்டவாளப் பகுதியில் மட்டும் ரயில்வே சார்பில் பாலம் கட்டப்படும். அதைத் தொடர்ந்து இருபுறமும் இணைப்பு சாலை நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்படும்.
    பணி ஆரம்பித்த ஒரு மாதத்தில்,  நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கு இழப்பீட்டுத் தொகை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்படுவதாகவும், பாலம் அமைக்கும் பணியை நிறுத்தக் கோரியும் நில உரிமையாளர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதைத்  தொடர்ந்து, ரயில்வே உயர்மட்டப் பாலம் கட்டும் பணியை நிறுத்த நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பிறகு கட்டுமானப் பணி முடங்கியது. 
    இந்நிலையில், 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம், உரிய இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகம் முன்வந்ததைத் தொடர்ந்து,  நீதிமன்ற வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆவாரம்பாளையம் லெவல் கிராஸிங்கின் இருபுறமும் சேர்த்து 1 கி.மீ. தூரத்துக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. 
    இதில் வீடுகள், தனியார் நிறுவனங்களின் நிலங்கள் 1 முதல் 3 சென்ட் வரை ஆர்ஜிதம் செய்யப்பட்டன. அதன் பிறகு ரயில்வே கேட்டின் இருபுறமும் பிரம்மாண்ட தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.
    இதனால், திருச்சி சாலை, அவிநாசி சாலையில் இருந்து கணபதி மற்றும் சத்தி சாலையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் காந்திபுரம் மேம்பாலம் வழியாகவும், ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருந்து இடதுபுறமாகவும் சென்று  சத்தி சாலைக்குச் சென்று வருகின்றனர்.  
    காந்திபுரம் மேம்பாலம் ராமகிருஷ்ணா மருத்துவமனை சிக்னல் வரையில் அமைக்கப்பட உள்ளதால், அதற்கான பணிகளும் நடைபெற்று வருவதால் சின்னசாமி சாலையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
    ஒன்றரை ஆண்டுகளாகியும் பாலம் கட்டும் பணி முடிவடையாததால் வாகன ஓட்டிகள் சுமார் 3 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டி ய நிலை உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர், பணிக்குச் செல்வோர் அதிக சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.  ரயில்வே பாலம் பணியை விரைந்து முடிக்கக் கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் வழங்கப்பட்டது. ஆயினும் மந்த கதியிலேயே பணிகள் நடந்து வந்தன. 
    தற்போது, தண்டவாளத்தையொட்டி 8 பிரம்மாண்ட தூண்கள் அமைக்கப்பட்டு, தூண்களுக்கு மேல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் இணைப்புப் பாலம் அமைக்க தூண்கள்  கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. 
    இதுகுறித்து ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், நிலம் கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் ஒரு சிலவற்றின் சுற்றுச்சுவர்களை இடித்து, மின் கம்பிகளை மாற்றும் பணியால் பாலம் பணியைத் தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, 80 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது. இன்னும் 4 மாதங்களில் மீதமுள்ள பணிகள் முடிக்கப்படும். அதன் பிறகு, ரயில்வே பாலத்தை நெடுஞ்சாலைப் பாலத்துடன் இணைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளும் என்றனர்.
    ஆபத்துப் பயணம்: ரயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், ரயில்வே கேட்டின் ஒருபுறம் இருந்து மறுபுறம் செல்ல வழியில்லாததால், அப்பகுதி மக்கள் தண்டவாளத்தைக் கடந்து மறுபக்கம் செல்கின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவியர் தண்டவாளத்தைக் கடந்து அபாயப் பயணம் மேற்கொள்கின்றனர். 
    போராட்டம் நடத்த திட்டம்: சிஐடியூ கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், 2017ல் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளாகப் பணி முடிவடையாமல் உள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு அலைச்சல் ஏற்படுவதுடன், சிவசக்தி காலனி மற்றும் ரயில்வே கேட் ஒட்டிய குடியிருப்புப் பகுதி மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 
    இப்பகுதியில் 100-க்கும் அதிகமான சிறு, குறு தொழிற் கூடங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்கள்  செல்ல வழியில்லாத சூழல் உள்ளது. மேலும், பாலம் அமைக்கப்படும் பகுதியில் தண்ணீர் வழிந்து செல்ல இதுவரை எவ்வித முன்னேற்பாடும் செய்யப்படவில்லை.  இதனால், மழைக் காலங்களில் பாலத்தின் அடிப்பகுதியில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தத்தளிக்கும் நிலை உள்ளது.
    பாலப் பணியை விரைவில் முடிக்க வலியுறுத்தி, எஸ்ஐஹெச்எஸ் காலனி ரயில்வே மேம்பாலம் அருகே நடத்தப்பட்டது போல, ஆவாரம்பாளையம் பாலம் முன்பும் மக்களைத் திரட்டி விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp