Enable Javscript for better performance
கோவையில் கைது செய்யப்பட்டவரின் நண்பர் வீட்டில் என்ஐஏ சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் கைது செய்யப்பட்டவரின் நண்பர் வீட்டில் என்ஐஏ சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 21st June 2019 10:07 AM  |   அ+அ அ-   |    |  

    கோவையில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீனின் நண்பர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டன. 
    கோவை, உக்கடம், குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட இடங்களில் முகமது அசாருதீன், அக்ரம் ஜிந்தா, ஷேக் இதாயத்துல்லா, அபுபக்கர், சதாம் உசேன், இப்ராஹிம் என்ற ஷாகின் ஷா ஆகிய ஆறு பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கொச்சியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் ஜூன் 12 ஆம் தேதி சோதனை நடத்தினர்.
    சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தச் சோதனையில், 14 செல்லிடப்பேசிகள், 29 சிம்கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 மடிக்கணினிகள், 6 மெமரி கார்டுகள், 4 கணினி ஹார்டு டிஸ்குகள், 1 இணைய சேவை கருவி, 13 குறுந்தகடுகள், ஒரு கத்தி, ஒரு எலக்ட்ரிக் பேடன், 300 ஏர் கன் (துப்பாக்கி) தோட்டாக்கள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    இதையடுத்து, இந்தக் கும்பலுக்கு தலைவராகச் செயல்பட்டதாகக் கூறி முகமது அசாருதீனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்ததாகவும், அந்த அமைப்பில் சேர இளைஞர்களை மூளைச் சலவை செய்ததாகவும் என்ஐஏ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
    இதையடுத்து, அவரை கேரளத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். முகமது அசாருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குனியமுத்தூரில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் சில ஆவணங்களைக் கொடுத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
    இதையடுத்து, என்ஐஏ அதிகாரிகள் முகமது அசாருதீனை அழைத்துக்கொண்டு குனியமுத்தூர், பி.கே.புதூர் அருகே உள்ள அவரது நண்பர் சினோத் (35) என்பவரது வீட்டுக்கு வியாழக்கிழமை வந்தனர்.
    அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது, சினோத்தின் வீட்டில் இருந்து இரண்டு கணினி ஹார்டு டிஸ்குகள் கைப்பற்றப்பட்டன.
    இதையடுத்து, அவரிடமும் என்ஐஏ அதிகாரிகள் சிறிது நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஜூன் 12 ஆம் தேதி என்ஐஏ அதிகாரிகள் முதற்கட்ட சோதனை நடத்திய பின்னர், கோவை மாநகர போலீஸார் உக்கடம், போத்தனூர் பகுதிகளில் சோதனை நடத்தி முகமது உசேன், ஷாஜகான், சபியுல்லா ஆகியோரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(உபா) கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
    பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி கோவையில் அடுத்தடுத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல, முகமது அசாருதீன் மற்றும் ஷேக் இதாயத்துல்லாவிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு கேரளத்தைச் சேர்ந்த சிலருடன் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    இவற்றைக் கருத்தில் கொண்டு இரு மாநில போலீஸாரும் குறிப்பிட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp