"வனம்' அமைப்பின் முயற்சியால் பசுமையான சூலூர் குளக்கரை!
By DIN | Published On : 24th June 2019 08:19 AM | Last Updated : 24th June 2019 08:19 AM | அ+அ அ- |

"வனம்' அமைப்பின் முயற்சியால் சூலூர் குளக்கரை பசுமையாக மாறியுள்ளது.
சூலூர் வனம் அமைப்பின் 4ஆம் ஆண்டு துவக்க விழா சூலூர் குளத்துப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சூலூரில் இளைஞர்கள், பசுமை நிழலமைப்பு, அரிமா சங்கங்கள், உரம் அமைப்பினர், அனைத்து அரசியல் கட்சியினர் இணைந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு வனம் அமைப்பினை தொடங்கினர். இந்த அமைப்பின் மூலம் சூலூர் சிறிய குளத்தின் கரைப் பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அடர்வனத்தை உருவாக்கும் நோக்குடன் 2,000 மரக்கன்றுகளை நட்டனர். அதோடு அவற்றிக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து பராமரித்து வருகின்றனர். இதன் பலனாக தற்போது அனைத்து மரங்களும் 20 அடி உயரம் வளர்ந்து அப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. இந்நிலையில் வனம் அமைப்பின் கூட்டம் சூலூர் குளக்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சூலூர் வனத்தை ஒட்டிய பகுதியில் பறவைகளுக்கு உணவு அளிக்கும் விதமாக பழ மரங்களை நெருக்கமாக "மியோவாகி' முறையில் உருவாக்குவது என முடிவுசெய்யப்பட்டது. பொதுமக்களிடையே மரம் வளர்த்தலை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சூலூர் வனம் அமைப்பின் நிகழ்ச்சியானது "தினமணி' நாளிதழ் சார்பில் பிரபலப்படுத்தப்பட்டு பெரும் நிகழ்வாக தொடங்கப்பட்டது. தற்போது அடர் வனம் உருவானதைக் கண்டு மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், வனம் அமைப்பினருக்கும், தினமணிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.