சுடச்சுட

  

  உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்: காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு

  By DIN  |   Published on : 26th June 2019 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவையில் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
  இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கோவை, உக்கடம், போத்தனூர் பகுதியைச் சேர்ந்த இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   இதைத்தொடர்ந்து கோவை மாநகர போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் கோவை, வின்சென்ட் சாலையில் உள்ள முகமது உசேன், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஷேக் சபியுல்லா , அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜஹான் ஆகியோரது வீடுகளைச் சோதனையிட்டனர். இதில் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்களிடம் போலீஸார் 2 நாள்களுக்கு மேலாக விசாரணை நடத்தினர். விசாரணையில், மூவருக்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்படி இவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
   இந்நிலையில் இவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதன்படி விசாரணை அதிகாரியான உதவி ஆணையர் செட்ரிக் மானுவேல் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் 8 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த மனு ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வர உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai