நஞ்சில்லா காய்கறிகள் உற்பத்திக்கு அங்கக உரம் பயன்படுத்துங்கள்: வேளாண் பல்கலை. துணைவேந்தர் அறிவுரை

வேளாண் சாகுபடியில் அங்கக உரங்களை பயன்படுத்தி நஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி மேற்கொள்ள

வேளாண் சாகுபடியில் அங்கக உரங்களை பயன்படுத்தி நஞ்சில்லா உணவுப் பொருள்கள் உற்பத்தி மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் நீ.குமார் தெரிவித்தார்.
 கோவை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிற்சி பிரிவு, விரிவாக்க கல்வி இயக்ககம் சார்பில் ஆஸஷ் (ஹஸ்ரீஸ்ரீங்ள்ள்) மற்றும் கஸ்தூரிபா காந்தி பாலிக்கா வித்யாலயா பள்ளிகளில் சத்தான காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் தலைமை வகித்து பேசியதாவது:  
விவசாயம் குறித்து குழந்தைகளுக்கு பள்ளியில் இருந்தே கற்றுக்கொடுக்க வேண்டும். காய்கறிகள், நெல், பழங்கள் போன்றவை எதன் வழியாக கிடைக்கிறது என்பதை அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். பசுமைப் புரட்சிக்குப் பின் உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஆனால் அங்கக உரங்கள், மருந்துகளைப் பயன்படுத்தி நஞ்சில்லா உணவுப்பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றார். 
தமிழ்நாடு வேளாண் பல்கழைக்கழக தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் இல.புகழேந்தி பேசியதாவது: 
காய்கறிகள், பழங்களின் அவசியத்தையும், பயன்களையும் தெரிந்துகொண்டதால் சமீபகாலங்களில் அதன் நுகர்வு அதிகரித்துள்ளது. காய்கறி, பழங்களை தோட்டங்களில்தான் வளர்க்க வேண்டும் என்றில்லை. தற்போது மாடித்தோட்டம், பள்ளித்தோட்டம் என குறுகிய இடங்களிலும் காய்கறி வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். நமது உடலுக்கு தேவையான சத்துக்களை மாத்திரைகளில் தேடக்கூடாது. உணவு வழியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறிகளில் பல்வேறு புதிய ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்றார். 
தொடர்ந்து சத்தான காய்கறிகள் உற்பத்தி செய்வது குறித்த தகவல் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்களுக்கு தோட்டம் அமைப்பதற்கு தேவையான குழித்தட்டுகள், நீர் தெளிப்பான், மண் வெட்டி உள்பட  தளவாடப் பொருள்கள் வழங்கப்பட்டன. 
நிகழ்ச்சியில் வேளாண் விரிவாக்க கல்வி இயக்ககம் இயக்குநர் மு.ஜவர்ஹலால், சமக்கிரஹ சிக்ஷா திட்ட இணை இயக்குநர் கே.செல்வகுமார், வேளாண்மை கொள்கை, திட்டம் மாநில திட்டக் குழுத் தலைவர் கே.ஆர்.ஜெகன்மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com