கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கியதில் 3 தொழிலாளர்கள் பலி
By DIN | Published On : 28th June 2019 06:30 AM | Last Updated : 28th June 2019 06:30 AM | அ+அ அ- |

கோவை மாவட்டம், கொண்டையம்பாளையம் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியபோது விஷவாயு தாக்கியதில் 3 கூலி தொழிலாளர்கள் வியாழக்கிழமை பலியாகினர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராஜப்பன் (38), பெருமாள் மகன் வேடியப்பன் (29), பொன்மாலை மகன் வேடியப்பன் (26). இவர்கள் குடும்பத்துடன் கோவை மாவட்டம், இடையர்பாளையம் பகுதியில் தங்கியிருந்து கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களை கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமி கார்டன் பகுதியில் இருக்கும் சுப்பிரமணியம் (70) தனது வெண்பன்றி வளர்ப்புக்கூடத்தின் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அழைத்துள்ளார்.
இதையடுத்து இவர்கள் மூவரும் லட்சுமி கார்டன் பகுதியில் இருக்கும் சுப்பிரமணியத்துக்குச் சொந்தமான கழிவுநீர்த் தொட்டியை இயந்திரம் மூலம் சுத்தம் செய்தனர். பிறகு காலியாக இருந்த தொட்டியை சுத்தம் செய்ய முதலில் ராஜப்பன் உள்ளே இறங்கியுள்ளார். அப்போது ராஜப்பன் மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து மேலே இருந்த பெருமாள் மகன் வேடியப்பன், பொன்மாலை மகன் வேடியப்பன் ஆகிய இருவரும் தொட்டியின் உள்ளே இறங்கியுள்ளனர். அப்போது தொட்டியின் உள்ளே இருந்த விஷவாயு அவர்களையும் தாக்கியுள்ளது. அதனால் தொட்டியில் இறங்கிய 3 பேரும் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளனர்.
இதைக் கண்டு அருகிலிருந்தவர்கள் கணபதி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் கழிவுநீர்த் தொட்டியில் இருந்து மூவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கழிவுநீர்த் தொட்டியை ஆய்வு செய்த அன்னூர் வட்டாட்சியர் வசந்தாமணி, வெண்பன்றிக் கூடத்துக்கு "சீல்' வைத்தார்.
உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் நாச்சிமுத்து என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணையில் கட்டுமான பணிக்காக நாகராஜ் என்பவர் எங்களது கணவர்களை வியாழக்கிழமை அழைத்து சென்றார்.
ஆனால் அங்கு கழிவு நீர்த் தொட்டியை சுத்தம் செய்ய வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிய 3 பேரும் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். அபாயமான பணியை மேற்கொள்ள வலியுறுத்தி, எங்கள் கணவர்களின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.