சிறுமியைக் கடத்திய ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது
By DIN | Published On : 02nd March 2019 09:28 AM | Last Updated : 02nd March 2019 09:28 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையத்தில் சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற ஓட்டுநரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், அய்யர் காலனி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (23). இவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 சிறுமியை ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் மதுரையில் இருந்து கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் குடியேறினர். அதன் பின்பும் அருண்குமார் கோவை வந்து சிறுமியை அடிக்கடி சந்தித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு முன்பு சிறுமியைக் காணவில்லை என்று துடியலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அதில் தனது மகளை அருண்குமார் கடத்திச் சென்று விட்டதாகத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, போலீஸார் சிறுமியை மீட்டு, அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.