விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுப்பு: தற்போதைய சந்தை மதிப்பில் விலை நிர்ணயிக்க வலியுறுத்தல்

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தற்போதைய

கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தற்போதைய சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என நில உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்னர். 
கோவை சர்வதேச விமான நிலையம் 600 ஏக்கர் பரப்பளவில் 9 ஆயிரம் அடி நீள ஓடுபாதையுடன் அமைந்துள்ளது. இங்கு சரக்கு விமானங்கள், சர்வதேச விமானங்கள் இயக்க வேண்டுமானால் 12 ஆயிரம் அடி நீள ஓடுபாதை தேவைப்படுகிறது.
ஆகவே விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக கடந்த 2010 ஆம் ஆண்டு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. அப்போது, விமான நிலையத்தையொட்டி உள்ள சின்னியம்பாளையம், இருகூர், உப்பிலிபாளையம், நீலாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், 624 ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதில் விவசாய நிலங்களுக்கு ஒரு சதுரடிக்கு ரூ.900 ம், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சதுர அடிக்கு ரூ.1,500 ம் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிலங்கள் எடுக்க 24 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பகுதி வாரியாக இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 ஆவது பகுதிக்கு உள்பட்ட உப்பிலிபாளையம், பாரதி நகர் மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கூட்டம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ( நிலம் எடுப்பு, விமான நிலைய விரிவாக்கப் பணிகள்) கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.
இதில் கலந்துகொண்ட நில உரிமையாளர்கள் தங்களிடம் இருந்து கையப்படுத்தப்படும் நிலங்களுக்கு தற்போதைய சந்தை மதிப்பின்படி சதுரடிக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 3 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். மேலும் மாற்று இடங்கள் ஒரு கி.மீ., தூரத்துக்குள் வழங்க வேண்டும் என சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
நிலம் மற்றும் இடத்துக்கான மதிப்பு பொதுப்பணித் துறை சார்பில் ஆய்வு செய்யப்பிட்ட பிறகு தான் நிர்ணயிக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு, விமான நிலைய விரிவாக்க பணிகள்) கோவிந்தராஜன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com