செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 330 பெண் குழந்தைகள் சேர்ப்பு
By DIN | Published On : 08th March 2019 07:42 AM | Last Updated : 08th March 2019 07:42 AM | அ+அ அ- |

மேட்டுப்பாளையம் அஞ்சல் துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு பாஸ் புத்தகங்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் அருகே தோலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபனாரி, ஆலங்கண்டி ஆகிய பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த 30 பெண் குழந்தைகள், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள 58 தபால் நிலையங்களுக்கு உள்பட பகுதிகளில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த 300 பெண் குழந்தைகள் என 330 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புக் கணக்குகளை தொடங்கி பாஸ் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி காரமடையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சலக அதிகாரி சுப்பிரமணியன் வரவேற்றார்.
இதில், திருப்பூர் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் கோபிநாதன் தலைமை வகித்துப் பேசுகையில், பெண் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தற்போது முக்கியத்துவம் அளித்து அஞ்சல் துறையின் சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து வருவது பாராட்டுக்குரியது என்றார்.
மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், சட்டப் பேரவை உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாகப் பங்கேற்று செல்வமகள் சேமிப்புக் கணக்குப் புத்தகங்களை வழங்கினர்.
இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் உள்கோட்ட உதவிக் கண்காணிப்பாளர் ஜெயராஜ்பாபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.