பெண்களைக் கவரும் திட்டங்கள்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் 2019 -20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சியின் 2019 -20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், பெண்களைக் கவரும் வகையில் ஏராளமான திட்டங்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சியின் 2019 -20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெடை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் புதன்கிழமை தாக்கல் செய்தார். இதில், பெண்களைக் கவரும் வகையிலான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் உள்ள 23 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்குப் பரிசோதனை மேற்கொள்ள ஐ.ஓ.டி. (ண்ர்ற் ந்ண்ற்) மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 80.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவப் பரிசோதனைகளை உடனுக்குடன் எளிய வகையில் குறுஞ்செய்தி வழியாகத் தெரிந்துக்கொள்ளலாம். கர்ப்பிணிகள்,  மருத்துவப் பரிசோதனை விவரங்களுக்காக சுகாதார நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. 
நடமாடும் கழிப்பிடம்:  கோவை மாநகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்கும் வகையில் பேருந்து நிலையம் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் நடமாடும் கழிப்பிடம் அமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கழிப்பிடத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் பெண்களுக்கே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் 1,000 தனிநபர் இல்லக் கழிப்பிடம் அமைக்க மாநகராட்சியின் பங்குத் தொகையாக ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
நூலகத்துக்கு கூடுதல் புத்தகங்கள்: மாநகராட்சியில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் புத்தகங்கள், அலமாரிகள் மற்றும் மேசைகள் வழங்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
குடிநீர் அபிவிருத்தி திட்டம்: அம்ரூட் திட்டத்தின் கீழ் பவானி ஆற்றினை ஆதாரமாகக் கொண்டு பில்லூர் - 3 ஆவது குடிநீர்த் திட்டப் பணிக்காக மாநகராட்சி பங்குத் தொகையாக ரூ.305.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இதற்காக, நிலம் கையகப்படுத்துவதற்கு நில உரிமையாளர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கட்டாயமாக நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அரசாணையும் பெறப்பட்டுள்ளது. 
சந்தை இடமாற்றம்: டாக்டர் எம்.ஜி.ஆர். மொத்த காய்கனி சந்தையை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள உரக் கிடங்கு வளாகத்துக்கு இடமாற்றவும், 12 ஏக்கர் பரப்பளவில் நவீனப்படுத்த ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. சங்கனூர் பள்ளத்தைச் சீரமைக்க ரூ. 458 கோடி நிதி கேட்டு அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com