சுடச்சுட

  

  தமிழகத்தில் ராகுல் காந்தி போட்டியிட வாய்ப்பு: மயூரா எஸ்.ஜெயக்குமார் பேட்டி

  By DIN  |   Published on : 17th March 2019 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு பொதுத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட கோரிக்கை வைத்துள்ளதாகவும், அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
   இது குறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாநிலத்திலும் அதிமுக தலைமையிலான அரசு செயல்படாமல் உள்ளது.
   இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை சந்திக்க திமுக தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியை ஏற்படுத்தியுள்ளோம். 
   இக்கூட்டணி சார்பில், கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார்.
   கூட்டணிக் கட்சிகள் இணைந்து 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றிபெறச் செய்வோம். தென்னகத்தின் நலன் கருதி மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகளில் ஏதாவது ஒரு பொதுத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
   ஏற்கெனவே இந்திரா காந்தி 1978-ஆம் ஆண்டு தேர்தலில் சிக்மகளூரிலும், 1980-ஆம் ஆண்டு தேர்தலில் மேடக் தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார். அதேபோல், சோனியா காந்தியும் 1999-ஆம் ஆண்டு தேர்தலில் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதனால் ராகுல் காந்தியும் தமிழகத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றார்.  
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai