சுடச்சுட

  

  பொள்ளாச்சி விவகாரம்: தடையை மீறி போராட்டம் நடத்திய 2 ஆயிரம் பேர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 17th March 2019 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
   பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியைச் சேர்ந்த பலருக்கு தொடர்புள்ளதாகக் கூறி, அவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகளும், கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
   மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
   இதில், பொள்ளாச்சி காந்தி சிலை அருகில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது. 
  இதில், தி.மு.க. தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் மகாலிங்கம், அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதிகா உள்ளிட்ட 350 பெண்கள் உள்பட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 
  மேலும் பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.பி.சக்திவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சக்திவேல் உள்பட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர். மருதமலை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 150 பேரும், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 417 பேரும், குனியமுத்தூர், ஆத்துப்பாலம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 235 பேரும் கைது செய்யப்பட்டனர்.
   மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 70 பெண்கள் உள்பட்ட 200 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுபோல், கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பிலும் போராட்டம் நடந்தது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் தடையை மீறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
   இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், கலவரத்தை தூண்டும் விதமாக நடத்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai