தனியார் நிறுவன உரிமையாளர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை: கோவை நீதிமன்றம் தீர்ப்பு

பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவன உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் திருச்சியைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த முன்விரோதம் காரணமாக தனியார் நிறுவன உரிமையாளரைக் கொலை செய்த வழக்கில் திருச்சியைச் சேர்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு அலங்கார வேலைப்பாடுகள் செய்து தரும் நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம் லால்குடியைச் சேர்ந்த கருப்பசாமி(20), வெற்றிச்செல்வன்(19), செல்வா(19) ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கும் கார்த்திகேயனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் 2016 ஜூலை 2 ஆம் தேதி கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அலங்கார வேலை செய்யும் பணியில் கார்த்திகேயன் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருப்பசாமி, வெற்றிச்செல்வன், செல்வா ஆகியோர் பணம் கேட்டு கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து மூவரும் சேர்ந்து கார்த்திகேயனைத் தாக்கியுள்ளனர். 
அப்போது கருப்பசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கார்த்திகேயனை சரமாரியாகக் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 
விசாரணை முடிவில் கருப்பசாமி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எம்.குணசேகரன் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். வெற்றிச்செல்வன், செல்வா ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததை அடுத்து அவர்களை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com