மலைவாழ் குடியிருப்பு வாக்குச் சாவடிக்கு மின் இணைப்பு வசதி
By DIN | Published On : 24th March 2019 03:32 AM | Last Updated : 24th March 2019 03:32 AM | அ+அ அ- |

கோவை, மலைவாழ் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்துக்கு மின் இணைப்பு வசதி வெள்ளிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆனைக்கட்டி, தூமனூர், கொண்டனூர், சேம்புக்கரை, ஆலமரமேடு, பனப்பள்ளி, ஜம்புகண்டி உள்பட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன.
இதில், சேம்புக்கரை, தூமனூர், மிளகாயன்பதி உள்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளன. இந்து மூன்று குடியிருப்புகளிலும் 331 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தூமனூர் மலைவாழ் குடியிருப்பில் உள்ள நடுநிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இக்கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்ட நிலையில் பள்ளிக்கு மட்டும் மின் இணைப்பு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
மக்களவைத் தேர்தலை ஒட்டி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள தூமனூர் நடுநிலைப் பள்ளிக்கு வெள்ளிக்கிழமை மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.