மாணவர்களை பந்தயக் குதிரைகளாகக் கருதக் கூடாது: நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் பேச்சு
By DIN | Published On : 24th March 2019 03:36 AM | Last Updated : 24th March 2019 03:36 AM | அ+அ அ- |

பள்ளி, கல்லூரி மாணவர்களை பந்தயக் குதிரைகளாக எண்ணாமல், தர்மத்தின் வழி நடத்தலுக்கு அறிவுறுத்தி மனிதநேயத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் பேசினார்.
கோவை, குமரகுரு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் நாள் விழா, கல்லூரி மாணவர்களுக்கான மகாத்மா காந்தி ஊக்கத் தொகை மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடந்தது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். இதில் தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்ரமணியன் பேசியதாவது:
தற்போதைய மாணவர்களை ஒப்பிடும்போது, எங்களின் தலைமுறையினர் மிகவும் அதிர்ஷ்டம் செய்துள்ளனர். படிக்கவும், நண்பர்களுடன் உரையாடவும் எங்களுக்கு நிறைய நேரம் இருந்தது. நாங்கள் செய்திகளை கடிதத்தின் வாயிலாகவே பரிமாறிக்கொண்டோம். ஆனால், தற்போது செல்லிடப்பேசி வாயிலாக குறுஞ்செய்தியாகி, மேலும் எண்ணங்களும் குறுகி வாழ்க்கையும் குறுகிப்போன தலைமுறையாக மாணவர்கள் மாறிவிட்டனர்.
பள்ளி, கல்லூரிகளில் கணிதம், வேதியியில், புவியியல், வரலாறு உள்ளிட்டவற்றைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.
ஆனால் எந்தப் பள்ளியிலும் மனிதனாவதற்குக் கற்றுக் கொடுப்பதில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் ஒழுக்கநெறி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்றைக்கு எந்த பள்ளிக்கூடத்திலும் ஒழுக்கநெறி வகுப்புகள் நடத்துவதில்லை. ஏனென்றால் ஒழுக்கநெறி வகுப்புகள் நடத்துவதற்கு இன்று எந்தப் பள்ளியிலும் ஆசிரியர்கள் இல்லையென ஒரு பள்ளியின் தாளாளர் தெரிவித்தார். இது மிகவும் வேதனையான விஷயம்.
ஆனால், இன்று நம் குழந்தைகளுக்கு வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம், அதில் வெற்றி ஒன்றுதான் குறிக்கோள் என்று கற்றுக்கொடுக்கிற காரணத்தினால் குழந்தைகள், ஓட்டப்பந்தய குதிரைகள் போல மாறி ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.
இந்த நிலைக்கு குழந்தைகளைத் தள்ளக்கூடாது என்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மாறாக தர்மத்தின் வழி நடத்தலை வலியுறுத்தி மனித நேயத்தை மாணவர்களுக்கு வளர்க்க வேண்டும்.
கேலி செய்தவர்களின் முன் நிமிர்ந்து வாழவும், உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் வெற்றி பெறுவது அவசியம். ஆனால் வெற்றி மட்டுமே வாழ்வின் குறிக்கோள் இல்லை என்பதை மாணவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஊருக்கு உழைத்திடல் யோகம் என அறிவுறுத்திய மகாகவி பாரதியாரின் கூற்றை வாழ்நாளில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து படிப்பு, நடனம், கலை, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கிய 1,074 மாணவர்களுக்கு மகாத்மா காந்தி ஊக்கத் தொகை மற்றும் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியன், இணை தாளாளர் சங்கர் வாணவராயர், கல்லூரி முதல்வர் செந்தில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.