Enable Javscript for better performance
கோவை மக்களவைத் தொகுதியில் 15 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் சுயேச்சைகள- Dinamani

சுடச்சுட

    

    கோவை மக்களவைத் தொகுதியில் 15 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் சுயேச்சைகள் போராட்டம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை புதன்கிழமை நடைபெற்ற நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் 15 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மனு தள்ளுபடி செய்யப்பட்டதைக் கண்டித்து சுயேச்சைகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மக்களவைத் தேர்தலுக்கான மனு தாக்கல் மார்ச் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் உள்ளிட்ட 30 வேட்பாளர்கள் சார்பில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
    இந்த நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட தேர்தல் அலுவலர் கு.ராசாமணி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தேவையான விவரங்கள் பூர்த்தி செய்யப்படாதது, உரிய ஆவணங்கள் இணைக்கப்படாதது போன்ற பல்வேறு காரணங்களுக்காக 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
    அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ப.கோவிந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி), பி.ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜக) ஆகியோரது மனுக்களும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ச.கல்யாணசுந்தரம் (நாம் தமிழர் கட்சி), ரா.மகேந்திரன் (மக்கள் நீதி மய்யம்), பு.மணிகண்டன் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) ஆகியோரது மனுக்களும் ஏற்கப்பட்டன.
    இதைத் தவிர அமமுக வேட்பாளர் என்.ஆர்.அப்பாதுரை மற்றும் கோ.கனகசபாபதி, வெ.கிருஷ்ணன், மோ.தனபால், அ.நடராஜன், வீ.புஷ்பானந்தம், பே.ராதாகிருஷ்ணன், யு.ராதாகிருஷ்ணன், ர.ராமலிங்கம் ஆகிய சுயேச்சைகளின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டன.
    அதேநேரம், வசந்தகுமார், சுந்தர்ராஜ், நூர் முஹமது, யுவராஜ், உமர் அலி உள்ளிட்ட 23 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுவை தள்ளுபடி செய்வதற்கான காரணத்தை வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் படித்துக் காண்பித்து ஒப்புதல் பெற்றார்.
    இருப்பினும், தங்களது வேட்புமனுக்கள் உரிய காரணமின்றி தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறி சில சுயேச்சை மனுதாரர்கள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தரையில் படுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபப்பான சூழல் நிலவியது.
    இதையடுத்து அங்கிருந்த போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். மனுக்களை திரும்பப் பெற வெள்ளிக்கிழமை (மார்ச் 29) கடைசி நாளாகும். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai