பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும் என்று  பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும் என்று  பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கோவை மாநகரில் இருந்து சிறுவாணி சாலையில் 7 கி.மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் அதாவது சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன்பு  சோழ மாமன்னன் கரிகாலனால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. 9 ஆம் நூற்றாண்டில்  சுந்தரர், இக்கோயிலுக்கு வருகை புரிந்து தேவாரப் பாடல்கள் பாடியதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. 
இக்கோயிலில்,  பட்டீஸ்வரர் என்ற பெயருடன், பச்சைநாயகி அம்மன் துணையுடன் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், பார்வதி உள்ளிட்ட தெய்வங்களும் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கின்றனர். இங்குள்ள லிங்கம், சுயம்பு எனக் கூறப்படுகிறது. தமிழர்களின் சிற்பக் கலைக்குச் சான்றாக இக்கோயிலில் கலையம்சத்தோடு காட்சிதரும் சிற்பங்களும், பிரமாண்டத் தூண்களும் திகழ்கின்றன. 
 அமாவாசை, பிரதோஷம், சித்ரா பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பட்டீஸ்வரரை தரிசிக்க வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும், பங்குனி உத்திர நாளில் இங்கு நடைபெறும் பச்சைநாயகி அம்மன் உடனமர் பட்டீஸ்வர சுவாமி தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து தேரை வடம் பிடிப்பார்கள்.  அதேபோல், ஆனி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் நாற்று நடும் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். இப்படியாக, கொங்கு மண்டலத்தில் பல்வேறு சிறப்புகள் கொண்ட புண்ணிய திருத்தலமாக உள்ள பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் சமீப காலமாக சுகாதாரம், பராமரிப்பு பணிகள் சரிவர நடக்காதது வருத்தம் அளிப்பதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  
கோயிலின் நுழைவாயில் எதிரில் உள்ள தெப்பக்குளத்தில் குப்பைகள், காலணிகள், பழைய துணிகள் போன்ற பொருள்கள் மிதக்கின்றன. குளத்துத் தண்ணீரில் கொசுக்கள் சூழ்ந்து காணப்படுகிறது. 4 அடியாக இருந்த தெப்பக்குளத்தின் சுற்றுச் சுவர், நாளடைவில் சிதிலமடைந்து 1 அடியாகக் குறைந்து விட்டது. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கருதி தெப்பக்குளத்தைச் சுற்றி புதிய மதில் சுவர் அமைக்க பக்தர்கள், மக்கள் தரப்பில் இருந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோயிலின் பின்புற மதில் சுவரை ஒட்டியவாறு பேரூராட்சிக்குச் சொந்தமான கட்டணக் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம், கோயில் வளாகத்திற்குள்ளும் வீசுகிறது. இதனால், தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்கள் முகம் சுளிக்க நேரிடுகிறது. கழிப்பிடத்தை  வேறு இடத்துக்கு மாற்றினால் கோயிலின் புனிதம் பாதுகாக்கப்படும்.
இதுகுறித்து தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் இரா.பழனிசாமி கூறியதாவது: 
பங்குனி உத்திரத் தேரோட்டம்  முடிந்து முன்பெல்லாம் கோயில் வளாகம் முன்பு உள்ள மைதானத்தில், தேரானது நிலைநிறுத்தப்பட்டு தகரக் கொட்டகைக்குள் வைத்து பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக தேர் வெட்டவெளியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வெயிலில் காய்ந்து தேர் உடையும் அபாயம் உள்ளது. ரூ.20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை தேர் தயாரிக்க செலவிட்டு அவற்றை முறையாகப் பராமரிப்பதில்லை. 
கோயிலின் முன்பாக கூட்டம் இல்லாத நாள்களிலும் சாலைத் தடுப்பு வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டு கயிறு மூலமாக இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. இதனால் முதியவர்கள் ஆலயத்துக்குள் செல்ல சிரமப்படும் சூழல் உள்ளது. கோயில் முன்பு உள்ள மைதானத்தில் இருந்த வாகன நிறுத்துமிடம், தற்போது ஆற்றின் அருகே மாற்றப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வருகின்ற பக்தர்கள் சாலையோரங்களில் தங்களின் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க, கோயிலின் தென்புறம், பேருந்து நிறுத்தத்துக்கு அருகில்  உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வாகன நிறுத்தம் அமைத்தால் நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு விபத்துகளைத் தவிர்க்க முடியும் என்றார். 
அப்பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர் கூறுகையில், "பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில்  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளாததால், பக்தர்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இக்கோயிலில் முறையாகப் பணிகள் நடைபெற, மற்ற கோயில்களில் உள்ளதுபோல் நிர்வாகத்தினருக்கு ஆலோசனைகள் வழங்க கோயில் பராமரிப்புக் குழு ஏற்படுத்த வேண்டும். அந்தக் குழுவில், கோயில் உதவி ஆணையர் தலைமையில், பக்தர்கள், தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் சுகாதாரம் மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதமாக நடைபெறும் என்றார். 
இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் சரவணன் கூறியதாவது:  கோயிலுக்கு சொந்தமான 2 தேர்களுக்கு தகரக் கூண்டு மற்றும் பராமரிப்பு செலவுக்காக கோயில் நிதியில் இருந்து ரூ.65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் அருகில் பக்தர்கள் பயன்படுத்தும் விதமாக ரூ. 46 லட்சம் மதிப்பில் ஆண், பெண் இருபாலருக்குமான நவீன கழிப்பிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 
தேர்தல் நெறிமுறைகள் தளர்த்தப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்பட உள்ளன. கோயில் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் நிர்வாகம் சார்பில் சுகாதாரம், பராமரிப்புப் பணிகள் சரியாக நடந்து வருகின்றன. எங்களுக்கு நல்ல ஆலோசனைகளை யார் கூறினாலும் ஏற்றுக் கொள்வோம். இதில் பாரபட்சம் எதுவும் காட்டப்படுவதில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com