பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
By DIN | Published On : 06th May 2019 03:03 AM | Last Updated : 06th May 2019 03:03 AM | அ+அ அ- |

பெரியநாயக்கன்பாளையம், காரமடை ஆகிய வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, சோளம், தென்னை ஆகியவற்றை குட்டியுடன் கூடிய 2 காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளைம் அருகே தோலம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட தோலம்பாளையம், தோலம்பாளையம் புதூர், மணல்பாளையம், மணல்பாளையம் புதூர், மேல்பாவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மலை அடிவாரப் பகுதியில் உள்ளன.
இப்பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் வாழை, கரும்பு, கத்திரிக்காய், வெண்டை, பாகற்காய், முள்ளங்கி, பூசணி, வெங்காயம் உள்பட பல்வேறு பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் இங்குள்ள வனத்தில் இருந்து மயில், காட்டுப்பன்றி, மான், யானை, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனப் பகுதியில் இருந்து மேல்பாவி கிராமத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு குட்டியுடன் கூடிய 2 காட்டு யானைகள் நுழைந்தன.
அந்த யானைகள், காமராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகளை சேதப்படுத்தின. தொடர்ந்து அருகிலுள்ள பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான வாழை, தென்னங்கன்றுகள், ரங்கசாமி என்பவரின் 700 வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இதேபோல இந்த யானைகள் தொடர்ந்து காரமடை வனச் சரகத்துக்கு உள்பட்ட தோலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார், மனோஜ், சத்யபிரியா, கணபதி ஆகிய விவசாயிகளின் வாழைப் பயிரை சேதப்படுத்தின.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயிகள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனவே, இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டுவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.