முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 2 கோடி மோசடி: தந்தை, மகன் கைது
By DIN | Published On : 15th May 2019 07:17 AM | Last Updated : 15th May 2019 07:17 AM | அ+அ அ- |

ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி ரூ. 2 கோடி வரை மோசடி செய்த தந்தை, மகன் ஆகியோரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோவை, நீலிக்கோணாம்பாளையம், பெரிய வீதியைச் சேர்ந்தவர் உதயராஜ் (41). இவரது தந்தை ஞானப்பிரகாசம் (67). இவர்கள் இருவரும் சேர்ந்து அதே பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூல் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்ததும் முதிர்வுத் தொகையைத் தராமல் சுமார் 30க்கும் மேற்பட்டோரிடம் ரூ. 2 கோடி வரை மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக சிங்காநல்லூர் நஞ்சப்பா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் அருள்மொழிவர்மன் (67) கோவை மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் சில நாள்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
2013 ஆம் ஆண்டு நான் ரூ. 10 லட்சம் தொகையை உதயராஜ், ஞானபிரகாசம் நடத்தி வந்த ஏலச்சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால், சீட்டு காலம் முடிந்த பின்னர் முதிர்வுத் தொகையை திருப்பித் தராமல் மோசடி செய்து விட்டனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்புகார் தொடர்பாக குற்றப் பிரிவு போலீஸார் மோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையின் முடிவில் உதயராஜ் மற்றும் அவரது தந்தை ஞானப்பிரகாசம் ஆகியோரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து மாநகர குற்றப் பிரிவு போலீஸார் கூறுகையில், இவர்கள் மீது 13 பேர் புகார் அளித்துள்ளனர். இவர்கள் 30க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ. 2 கோடி வரை வசூலித்து மோசடி செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.