இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: கமல்ஹாசன் மீது இந்து அமைப்பினர் புகார்

தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர்

தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவையில் உள்ள காவல் நிலையங்களில் இந்து முன்னணியினர் புகார் அளித்துள்ளனர்.
 அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். இந்தக் கருத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்பினர் சார்பில் கமல்ஹாசனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக இந்து முன்னணி அமைப்பின் சார்பில் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் மனு புதன்கிழமை அளிக்கப்பட்டது. இதேபோல அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி காவல் நிலையங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களின் அடிப்படையில் வழக்குகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
 மேலும், கமல்ஹாசனின் பேச்சைக் கண்டித்து அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் அருகில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். மாநில இளைஞரணிச் செயலர் சுபாஷ் சிறப்புரையாற்றினார். அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கலைந்து செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com