காங்கிரஸை ஒதுக்கிவிட்டு மூன்றாம் அணி அமைக்கும் முயற்சி சாத்தியமற்றது: திருநாவுக்கரசர்
By DIN | Published On : 16th May 2019 08:13 AM | Last Updated : 16th May 2019 08:13 AM | அ+அ அ- |

காங்கிரஸை ஒதுக்கிவிட்டு மூன்றாம் அணி அமைக்கும் முயற்சி என்பது சாத்தியமற்றது மற்றும் தேவையற்றது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
சூலூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோவையில் புதன்கிழமை பிரசாரம் செய்தார். பிரசாரத்துக்கு முன்னதாக அண்மையில் மறைந்த, கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ஏ.சுப்பிரமணியத்துக்கு அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இடையேயான உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசி வரும் நேரத்தில், ஒருமித்தக் கருத்துடைய தலைவர்கள் சந்திப்பது இயல்பானது. இத்தகையச் சூழலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் இணைந்து ஆட்சிக்கு வருவதுதான் சரியான தீர்வாக அமையும். ஆனால், காங்கிரஸை ஒதுக்கிவிட்டு மூன்றாவது அணி அமைப்பது சாத்தியமற்றது மற்றும் தேவையற்றது.
இந்து தீவிரவாதி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பேசியது தவறில்லை. இதை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லைஎன்றார்.
காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மௌலானா, கோவை வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், தெற்கு மாவட்டத் தலைவர் எம்.பி.சக்திவேல், ஹெச்எம்எஸ் மாநிலச் செயலர் டி.எஸ்.ராஜாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.