கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி
By DIN | Published On : 16th May 2019 08:15 AM | Last Updated : 16th May 2019 08:15 AM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கும் எளிதல் இந்தக் காய்ச்சல் பரவியது. மேலும் அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் பரவியதால் பாதிப்பு அதிகமானது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தடுப்பூசி போட சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றி காய்ச்சால் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறியதாவது:
கோவையில் இதுவரையில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இல்லை. மழை காலத்தில் இந்தக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நோயாளிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான டாமிபுளு மாத்திரைகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.