சூலூர் இடைத்தேர்தல்: போலீஸாருக்கு பணியிடம் ஒதுக்கீடு
By DIN | Published On : 16th May 2019 08:14 AM | Last Updated : 16th May 2019 08:14 AM | அ+அ அ- |

சூலூர் இடைத்தேர்தலில் வாக்குச் சாவடிகளில் பணிபுரியவுள்ள போலீஸாருக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்லுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்காக சூலூர் தொகுதியில் 324 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு பணிக்கு கோவை மாநகரம், ஊரகம் மற்றும் திருப்பூர் மாநகர போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சூழற்சி முறையில் கணினி மூலம் பணியிடம் ஒதுக்கீடு செய்யும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
சூலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் தேர்தல் பொது பார்வையாளர் அருண்குமார் தலைமையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வாக்குச் சாவடிக்கு ஒரு போலீஸார் வீதம் தேர்தல் பணியில் 324 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதில் சூலூர் தொகுதியைச் சேர்ந்த போலீஸார் தவறுதலாக இடம்பிடித்துவிடக் கூடாது என்பதற்காக கணினி மூலம் சுழற்சி முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தவிர, பதட்டமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புக்கு ஊர்க்காவல் படை, சி.ஆர்.பி.எப். வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றனர்.