சேதமான வாழைகளுக்கு 1 ஏக்கருக்கு 75% இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்

இயற்கை பேரிடர் மற்றும் வன விலங்குகளால் சேதமாகும் வாழைகளுக்கு 1 ஏக்கருக்கு ஆன மொத்த செலவில்

இயற்கை பேரிடர் மற்றும் வன விலங்குகளால் சேதமாகும் வாழைகளுக்கு 1 ஏக்கருக்கு ஆன மொத்த செலவில் 75 சதவீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். 
 கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை  அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கதளி, நேந்திரன், பூவன், ரோபஸ்டா, செவ்வாழை உள்பட பல ரகங்களை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழைகள் மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிகளில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில மொத்த வியாபாரிகள் விவசாய நிலங்களுக்குச் சென்று வாழைகளை விலைக்கு வாங்கி தமிழகம் மட்டுமல்லாமல் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். 
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி சிறுமுகை, இரும்பறை, மூலையூர், இழுப்பநத்தம், மூலையனூர், சிறுமுகை, பெல்லேபாளையம், லிங்காபுரம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான வாழைகள் சேதமாகின. இதில் அறுவடைத் தயாராக இருந்த வாழைகள் முற்றிலும் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளன. 
இதில் சேதமான வாழைக்கு 1 ஏக்கருக்கு தோட்டக் கலைத் துறை சார்பில் 2.7 சதவீதமும், வனத் துறை சார்பில் 22.5 சதவீதமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சிறுமுகை வாழை விவசாயி சுப்பிரமணி கூறியதாவது: 
ஒரு ஏக்கர் வாழை பயிரிட்டது முதல் அறுவடை செய்யும் வரை ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.50 லட்சம் வரை செலவாகிறது. இதில் வன விலங்குகளாலும், இயற்கை பேரிடர்களாளும் ஏற்படும் பாதிப்புக்கு அரசு சார்பில் குறைந்த பட்ச இழப்பீட்டுத் தொகையே வழங்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் அடுத்த கட்ட விவசாயத்தை மேற்கொள்ள முடியாமல் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்று சேதாரம் ஏற்படும்போது ஒரு ஏக்கருக்கு செலவான மொத்தத் தொகையில் அரசு 75 சதவீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
காரமடை தோட்டக் கலை துணை இயக்குநர் ராம்பிரசாத் கூறியதாவது: 
பல்வேறு வகைகளில் விவசாயிகளுக்கு ஏற்படும் சேதங்களுக்கு தோட்டக் கலைத் துறை, வேளாண் துறை, வனத் துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது. இதில் தோட்டக் கலைத் துறை சார்பில் ஒரு ஏக்கருக்கு ரூ. 5400 இழப்பீடாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 1 ஏக்கர் நிலத்தில் 100 சதவீதம் பயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் ரூ. 50,000 முதல் ரூ. 55,000 வரை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது என்றார்.
 மேட்டுப்பாளையம் வனச் சரகர் செல்வராஜ் கூறியதாவது: 
வன விலங்குகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீட்டு தொகை வனத் துறை சார்பில் வழங்கப்படுகிறது. இதன்படி 1 ஹெக்டருக்கு ரூ. 62,500 இழப்பீடு வழங்கப்படுகிறது. இதற்காக வருவாய் துறை, தோட்டக் கலைத் துறை, வேளாண் துறை அதிகாரிகளின் திட்ட அறிக்கையின் படி வனத் துறை சார்பில் சார்பில் இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com