தக்காளி வரத்து குறைவால் கிலோ ரூ. 50க்கு விற்பனை
By DIN | Published On : 16th May 2019 08:13 AM | Last Updated : 16th May 2019 08:13 AM | அ+அ அ- |

கோவையில் தினசரி சந்தைகளுக்கு உள்ளூர் தக்காளி வரத்து குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு சில்லறை விற்பனை விலை கிலோ ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு வட்டாரங்களில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தக்காளி உழவர் சந்தைகள் மற்றும் கோவை நகரில் உள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், டி.கே.மார்க்கெட், சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தினமும் சராசரியாக மார்க்கெட்டுக்கு 200 டன் வரை தக்காளி வரத்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கடந்த சில நாட்களாக சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர்.மார்க்கெட் மொத்த வியாபாரி செல்வம் கூறியதாவது:
கோவை சந்தைகளுக்கு உள்ளூர் வரத்து மட்டுமில்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் ஆந்திரம், கர்நாடகம் உள்பட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி வரத்து உள்ளது. கடந்த ஒருமாதமாக உள்ளூர் மற்றும் வெளியூர் தக்காளி வரத்து குறைந்து விட்டன. எம்.ஜி.ஆர். மார்க்கெட்டுக்கு தினமும் 200 டன் வரை தக்காளி வரத்து இருக்கும். ஆனால், தற்போது 50 டன் மட்டுமே வரத்து உள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது.
24 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.800 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது. அதற்கே தட்டுப்பாடாகவும் உள்ளது. மொத்த விற்பனையில் கிலோ ரூ. 40 க்கும் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.20 வரை விலை உயர்ந்துள்ளது என்றார்.