Enable Javscript for better performance
தலையில் கல்லைப் போட்டு இளைஞர் கொலை: நண்பர் கைது- Dinamani

சுடச்சுட

    

    போதையில் நடைபெற்ற தகராறில் நண்பரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    கர்நாடக மாநிலம், மைசூருவைச் சேர்ந்தவர் சுப்பன் (28). துப்புரவுப் பணியாளரான இவர் கோவை வெள்ளலூரில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இவர் தன் நண்பர்களுடன் வெளியே செல்வதாகக் கூறிவிட்டு வியாழக்கிழமை இரவு வீட்டை விட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரைப் பல இடங்களில் தேடினர். அவரது செல்லிடப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. 
    இதுதொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சுப்பனின் உறவினர்கள் புகார் 
    தெரிவித்தனர். 
    இந்நிலையில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 
    சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அது காணாமல்போன சுப்பன் என்பதை உறுதி செய்தனர். 
    இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
     இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், வீட்டைவிட்டுச் சென்ற சுப்பன், அவரது நண்பர் சக்திவேல் என்பவருடன் செல்வதாகக் கூறிவிட்டு சென்றதாக உறவினர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நீலிக்கோணாம்பாளையம், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (27) என்பவரைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். 
    விசாரணையில், அவர் சுப்பனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மீன் கடையில் வேலை பார்த்து வந்த சக்திவேல், சுப்பனுடன் நீண்ட நாள்களாக நண்பராகப் பழகி வந்துள்ளார். இருவரிடையே பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. 
    இருவரும் சேர்ந்து புதன்கிழமை இரவு மது அருந்தச் சென்றுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
    வாக்குவாதம் முற்றியதையடுத்து சக்திவேலை, சுப்பன் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் அங்கிருந்த கல்லைத் தூக்கி சுப்பனின் தலையில் போட்டுள்ளார். 
    இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேலை போலீஸார் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai