அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு வாய்ப்பு: டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு தகவல்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகப் போரால் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக நாடுகள் மீது கடந்த 25 ஆண்டுகளாக சீனா செலுத்தி வரும் வர்த்தக ஆதிக்கத்தைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்க அதிபர் டிரம்ப்,  சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீதான வரி விதிப்பை உயர்த்தியுள்ளார். அதன்படி, தற்போது சுமார் 4 கோடி டாலர்கள் மதிப்பிலான ஜவுளிப் பொருள்களின் இறக்குமதிக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் உயர்ரக தொழில்நுட்பம் தொடர்பான பொருள்களின் உற்பத்தி சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும், சாதாரண பொருள்களின் உற்பத்தி ஆசிய நாடுகளுக்கும்  இடம் பெயரும் என்று கருதப்படுகிறது.
 இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது. இதை 25 சதவீதமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு அமெரிக்க - சீன வர்த்தகப் போர் உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
சீனாவின் ஜவுளித் துறை ஏற்றுமதி 260 பில்லியன் டாலர்களாகவும், இந்தியாவின் ஏற்றுமதி 37 பில்லியன் டாலர்களாகவும் உள்ளன. சீனப் பொருள்கள் மீது அதிக வரி விதிக்கப்பட்டிருப்பதால் வாங்குபவர்களின் கவனம் மற்ற நாடுகள் மீது திரும்பும். சீனாவின் இறக்குமதியில் 25 சதவீதம் அளவுக்கு வர்த்தகம் இந்தியாவுக்கு வந்தாலே அது சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கான ஏற்றுமதி வாய்ப்பாக இருக்கும். அது இந்திய மதிப்பீட்டில் திருப்பூரைப் போன்ற இரண்டு ஏற்றுமதி மண்டலங்களின் அளவுக்கானது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் ஏற்றுமதி ஏற்றம் பெறாமல் இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பினால் ஏற்றுமதி சதவீதத்தை அதிகரிக்கவும், அதன் மூலம் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம், ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு இந்தியாவில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏற்றுமதித் துறைக்கு தனி அமைச்சரை நியமிப்பதுடன், அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஏற்றுமதி இலக்கை நிர்ணயித்து பணியாற்ற வேண்டும்.
அமெரிக்காவுடன் பேசி இறக்குமதியை அதிகரிப்பதற்கான ஒப்பந்தங்களை செய்வதுடன், உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி வரிச் சலுகைகளை உடனடியாக வழங்குவது, சூழலுக்கு கேடில்லாத வகையில் ஆடைகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவது போன்ற முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com