முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு
By DIN | Published On : 18th May 2019 06:31 AM | Last Updated : 18th May 2019 06:31 AM | அ+அ அ- |

கோவையில் சாலையோரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தையை மாணவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி சாலையில் மாணவர்கள் சிலர் வியாழக்கிழமை இரவு நடந்து சென்றனர். அப்போது, கல்லூரி வாசல் அருகே குழந்தையின் அழுகுரல் கேட்டது. மாணவர்கள் அங்கு சென்று பார்த்த போது, துணியால்
சுற்றப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது. இதைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் பார்த்தபோது அது ஆண் குழந்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு சிசு பராமரிப்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்தக் குழந்தை பிறந்து 5 முதல் 7 நாள்கள் இருக்கலாம். 2.9 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் சிறிது சோர்வாக உள்ளது. தற்போது சிகிச்சைக்குப் பின் நன்றாக உள்ளது. மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் இருந்து குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.