முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
சூலூர் தொகுதியில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப் பதிவு
By DIN | Published On : 18th May 2019 06:30 AM | Last Updated : 18th May 2019 06:30 AM | அ+அ அ- |

சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவுபெற்றது. இந்தத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 19) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
கோவை சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கனகராஜ் (64). இவர் மார்ச் 22 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து சூலூர் உள்பட அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாளான மே 19ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.கந்தசாமி, திமுக வேட்பாளர் பொங்கலூர் நா.பழனிசாமி, அமமுக வேட்பாளர் கே.சுகுமார், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜி.மயில்சாமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.வி.விஜயராகவன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 22 பேர் போட்டியிடுகின்றனர்.
அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பிரசாரம் செய்தனர். திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அமமுக வேட்பாளரை ஆதரித்து டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான், மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் ஆகியோர் பிரசாரம் செய்தனர். அந்தந்த கட்சிகளில் கூட்டணியில் உள்ள தலைவர்களும் தங்கள் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் அரவக்குறிச்சி பிரசாரத்தின்போது இந்துக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கமல் மீது கோவையில் உள்ள குனியமுத்தூர், துடியலூர், அன்னூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இந்து அமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் அவர் கோவையில் மே 17 ஆம் தேதியன்று பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவுபெற்றது. இந்தத் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (மே 19) வாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு தொகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.