முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
நகைக்கடையில் திருட்டு: ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது
By DIN | Published On : 18th May 2019 06:30 AM | Last Updated : 18th May 2019 06:30 AM | அ+அ அ- |

நகைக்கடையில் இருந்து 56 பவுன் தங்க நகைகளைத் திருடிய ஊழியர் மற்றும் அவரது உறவினரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கமேஸ்வரன். இவர் நகைக்கடை வைத்துள்ளார். இவரிடம் வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முகவேல் (45) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். சங்கமேஸ்வரனின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் நகைகளை வாடிக்கையாளர் நிறுவனங்களில் ஒப்படைக்கும் பணியை சண்முகவேல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் உள்ள வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பதற்காக 5 கிலோ எடையுள்ள தங்க நகைகளை எடுத்துக்கொண்டு மே 9 ஆம் தேதி சண்முகவேல் சென்றுள்ளார். 1 கிலோ எடையுள்ள நகைகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு மீதமுள்ள நகைகளை கடையில் சண்முகவேல் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து மீதமிருந்த நகைகளைச் சரிபார்த்தபோது அதில் இருந்து சுமார் 450 கிராம் (56.25 பவுன்) தங்க நகைகள் காணாமல்போனது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகவேலிடம் சங்கமேஸ்வரன் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணானத் தகவல்களைத் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சங்கமேஸ்வரன் கடைவீதி போலீஸாரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.
சண்முகவேலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் நகைகளைத் திருடியதை ஒப்புக்கொண்டார். மேலும், கடன் தொல்லையில் இருந்து வந்ததால் தனது தங்கையின் கணவரான திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த ஆறுச்சாமி (40) என்பவருடன் சேர்ந்து நகைகளைத் திருடியதாகத் தெரிவித்தார். இதையடுத்து சண்முகவேல் மற்றும் ஆறுச்சாமியைப் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருடிய நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக தனது வீட்டில் சண்முகவேல் பதுக்கி வைத்திருந்தார். அவரிடம் இருந்து 400 கிராம் தங்கத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மீதமுள்ள நகைகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.