முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்: மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
By DIN | Published On : 18th May 2019 06:31 AM | Last Updated : 18th May 2019 06:31 AM | அ+அ அ- |

கோவை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களில்
கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
வாக்கு எண்ணிக்கைக்கு கவுண்டம்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 20 மேசைகளும், மற்ற 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 14 மேசைகளும் அமைக்கப்பட உள்ளன. 23ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குவதால் வாக்கு எண்ணிக்கை இட முகவர்கள் அன்று காலை 6 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வர வேண்டும். வரும்போது அடையாள அட்டையைத் தவறாமல் கொண்டு வரவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்களை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்க இயலாது. வாக்கு எண்ணும் மையத்தில் செல்லிடப்பேசியை எடுத்துச் செல்ல அனுமதில்லை. வாக்கு எண்ணும் மையத்துக்குள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார், மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்ன ராமசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சியின் முகவர்கள் கலந்து கொண்டனர்.
இடைத்தேர்தல் வாக்குகளை எண்ண தனி அறை: சூலூர் சட்டப் பேரவை இடைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறுகிறது. இங்கு பதிவாகும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோவை தடாகம் சாலையில் உள்ள கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட உள்ளன. வரும் 23ஆம் தேதி காலை 8 மணிக்கு கோவை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போதே சூலூர் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தனி அறையில் எண்ணப்பட உள்ளன என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.