உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகளை விற்றால் நடவடிக்கை: ஆர்.டி.ஓ.
By DIN | Published On : 18th May 2019 06:32 AM | Last Updated : 18th May 2019 06:32 AM | அ+அ அ- |

கோவையில் சட்ட விரோதமாக உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜே.கே.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகள் (நம்பர் பிளேட்) பொருத்துவதற்கு தமிழக அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காத நிலையில், சிலர் சட்ட விரோதமாக அவற்றைத் தயாரித்து விற்பனை செய்து வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. சில குறிப்பிட்ட கார் விற்பனை நிலையங்களில் இதுபோன்ற நம்பர் பிளேட்டுகள் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதி வழங்காத நிலையில் இதுபோன்ற உயர் பாதுகாப்பு பதிவெண் பலகைகளை தயாரித்து விற்பனை செய்வது சட்ட விரோதமாகும். இதுபோன்ற தவறுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட முகவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.