ரூ.12 கோடி பொது ஒதுக்கீட்டு நிலம் மீட்பு: மாநகராட்சி நடவடிக்கை
By DIN | Published On : 20th May 2019 06:40 AM | Last Updated : 20th May 2019 06:40 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 37-ஆவது வார்டில், விற்க முயற்சிக்கப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வார்டுகளில் பூங்கா, சமுதாயக் கூடம் அமைப்பதற்கு பல ஏக்கர் நிலங்கள் பொது ஒதுக்கீடு இடங்களாக (ரிசர்வ் சைட்டுகள்) ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை மாநகராட்சி அதிகாரிகள் அடையாளம் கண்டு, கம்பி வேலி அமைத்தும், அறிவிப்புப் பலகை வைத்தும் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட குருசாமி நகரில் சமுதாயக் கூடம் அமைப்பதற்காக 90 சென்ட் பொது ஒதுக்கீடு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சிலர் பட்டா பெற்று விற்க முயற்சிப்பதாக மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத்துக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையரின் உத்தரவுப்படி, குருசாமி நகரில் உள்ள அந்த இடத்தை நகரமைப்பு அதிகாரிகள் அளவீடு செய்தனர். அதன் பிறகு அவ்விடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. இடத்தைச் சுற்றி கம்பி வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 27-ஆவது வார்டு பகுதியில் ரூ.18 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீடு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டது குறிப்பிடத்தக்கது.