கோவையில் சூறாவளிக் காற்றால் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதம்: சரவணம்பட்டியில் 24 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
By DIN | Published On : 27th May 2019 08:08 AM | Last Updated : 27th May 2019 08:08 AM | அ+அ அ- |

கோவையில் சனிக்கிழமை மாலை சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால், சரவணம்பட்டியில் சில இடங்களில் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் சேதமடைந்ததால் அப்பகுதிகளில் 24 மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மாலை மழை பெய்தது.
இதில் நகரின் சில இடங்களில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது.
சரவணம்பட்டி அருகே அத்திப்பாளையம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. அப்பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வீசிய சூறாவளிக் காற்றால், கோவை - சத்தியமங்கலம் சாலை, சரவணம்பட்டியில் சாலையோரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது.
இதில், அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் சேதமடைந்தன. சரவணம்பட்டி அருகே விசுவாசபுரம் பகுதியில் பெரிய மரம் முறிந்து அங்கிருந்த மின் கம்பம் மீது சாய்ந்தது. இதேபோல், சரவணம்பட்டி-துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே சாலையோரத்தில் இருந்த மரம் முறிந்து அங்கிருந்த மின் கம்பத்தின் மீது விழுந்தது.
காளப்பட்டி, கணபதி, காந்தி மாநகர் பகுதிகளிலும், சில இடங்களிலும் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தன. இதனால், சரவணம்பட்டி, கணபதி, விசுவாசபுரம், காந்தி மாநகர், காளப்பட்டி பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.
இதையடுத்து, அப்பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டனர். மின் கம்பங்கள் மீது விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து, ஒரு சில இடங்களில் இரவு 10 முதல் 11 மணிக்குள் மின் விநியோகம் சீரானது. ஆனால், சரவணம்பட்டி பகுதியில் 3 இடங்களுக்கு மேல் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால், அப்பகுதிகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து, மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டனர். பழுது பார்க்கும் பணி முடிவடைந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மின் விநியோகம் தொடங்கியது.
இதனால், சரவணம்பட்டி, விசுவாசபுரம், கணபதியில் ஒரு சில பகுதியில் சனிக்கிழமை மாலை 5 முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை 24 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.