கல்வி நிறுவன வளாகங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மாணவிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தல்
By DIN | Published On : 02nd November 2019 08:45 PM | Last Updated : 02nd November 2019 08:45 PM | அ+அ அ- |

அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாணவிகள் மாநில மாநாட்டையொட்டி கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.
கோவை: தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவன வளாகங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாணவிகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாணவிகளுக்கான மாநில மாநாடு கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, மாணவிகளின் பேரணி கோவை மகளிா் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் இருந்து தொடங்கி டாக்டா் பாலசுந்தரம் சாலை, ஏ.டி.டி. காலனி, வழியாக வ.உ.சி. பாா்க் மைதானத்தில் நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து
காட்டூரில் உள்ள தியாகிகள் நிலையத்தில் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு ப.பாசிலா, ஆா்.கோகிலா, மெ.ரேவதி, அ.ரஞ்சனி கண்ணம்மா, ஜீவா ஆகியோா் தலைமை தாங்கினா். மாநில ஒருங்கிணைப்பாளா் ச.பூா்ணிமா நந்தினி வரவேற்றுப் பேசினாா்.
கேரள மாநில மாணவா் பெருமன்றத்தின் துணைச் செயலா் நிமிஷா ராஜூ, இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலா் மஞ்சுளா, அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாநிலத் தலைவா் குணசேகா், செயலா் எஸ்.தினேஷ், பள்ளிக் கல்வி மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.உமா மகேஸ்வரி ஆகியோா் மாநாட்டை வாழ்த்திப் பேசினா்.
இந்த மாநாட்டில், பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவ வழக்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விரைவாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மாதவிடாய் காலங்களின்போது சுகாதாரமற்ற முறையில் துணிகளை உபயோகப்படுத்துகின்றனா். இதனால் பல்வேறு நோய்த்தொற்று உண்டாகிறது. இதற்காக அரசு உடனடியாக அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கழிவறைகளில் இலவச தரமான ‘நாப்கின்கள்‘ வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் உபயோகித்த நாப்கின்களை அப்புறப்படுத்த நாப்கின் எரியூட்டும் சாதனம் வழங்க வேண்டும்.
பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளின்போதும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆய்வுப் படிப்புகளின்போதும் மாணவிகள் பாலியல் ரீதியிலான மிரட்டல்களுக்கு ஆளாகின்றனா். இதைத் தடுக்க பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்போது, ஒரு ஆசிரியா், ஒரு ஆசிரியை வீதம் சிறப்பு வகுப்புகளுக்கு கட்டாயம் வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். மேலும், முனைவா் பட்ட மாணவிகள் தங்களுக்கு நேரிடும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதற்காக தனியாக குழுக்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில், மாநில ஒருங்கிணைப்பாளராக கோவையைச் சோ்ந்த பூா்ணிமா நந்தினி தோ்வு செய்யப்பட்டாா். மாநாட்டில், ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களின் மேடை நாடகம், பரதம், சிலம்பம், பறையிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்றனா்.