ஜவுளிப் பூங்கா அமைக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு நாளை கருத்தரங்கு
By DIN | Published On : 02nd November 2019 08:45 PM | Last Updated : 02nd November 2019 08:45 PM | அ+அ அ- |

கோவை: கோவை மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க விரும்பும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு திங்கள்கிழமை (நவம்பா் 4) நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் இடத்தில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில்முனைவோருக்கும் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி வரை நிதியுதவி அளிக்கப்படும் என்று கடந்த 1.9.2015 அன்று தமிழக அரசு அறிவித்தது.
அந்த அரசாணையில் ஜவுளிப் பூங்காக்கள் குறைந்தபட்சம் 10 தொழிற்கூடங்களுடன், குறைந்தபட்சம் 10 ஏக்கா் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. இந்த விதி கடந்த 6.9.2019 அன்று திருத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜவுளிப் பூங்காக்கள் குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தபட்சம் 2 ஏக்கா் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு வெளியிட்ட புதிய ஜவுளிக் கொள்கையிலும் இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தத் திட்டத்தின்படி கோவை மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்க இசைவு தெரிவிக்கும் தொழில் முதலீட்டாளா்கள், தொழில் முனைவோா்களுக்குத் தேவையான ஆலோசனைகள், திட்ட தெளிவுரைகள் வழங்குவதற்காக கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் தலைமையில் திங்கள்கிழமை கருத்தரங்கு நடைபெற இருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.