மாநகரில் 4 இடங்களில் உரம் தயாரிப்புக் கூடங்கள் பணி நிறைவு
By DIN | Published On : 02nd November 2019 08:07 AM | Last Updated : 02nd November 2019 08:07 AM | அ+அ அ- |

கோவை மாநகராட்சியில் 4 இடங்களில் உரம் தயாரிப்புக் கூடங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வாா்டுகளில் தினமும் 600 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இவற்றை 2 நாள்களுக்கு ஒருமுறை மாநகராட்சி ஊழியா்கள் மினிடோா், லாரிகள் மூலமாக வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் கொட்டி வருகின்றனா். இந்நிலையில் வெள்ளலூா் கிடங்கிற்கு கொண்டு செல்லப்படும் குப்பைகளின் அளவை குறைப்பதற்காக மாநகரில் 59 இடங்களில் உரம் தயாரிப்புக் கூடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக ரூ.11.62 கோடி மதிப்பில் 10 இடங்களில் உரம் தயாரிப்புக் கூடங்கள் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு, அவற்றில் 4 இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
துப்புரவுத் தொழிலாளா்கள் வீடு, வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து சேகரிப்பாா்கள். சமையலறைக் குப்பைகள் தினசரியும், பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகள் வாரம் ஒருமுறையும் சேகரிக்கப்படும். அதன் பிறகு குப்பைகள் அருகில் உள்ள உரம் தயாரிப்புக் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரங்களாக மாற்றப்படும்.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு மாநகரில் உள்ள குப்பைத் தொட்டிகள் முழுவதுமாக அகற்றப்பட்டு அங்கு மரக் கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக 10 இடங்களில் தொடங்கப்பட்ட உரம் தயாரிப்புக் கூடப் பணிகளில் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட 4 இடங்களில் பணியானது முழுமையாக முடிவடைந்துள்ளது. இங்கு விரைவில் உரம் தயாரிப்புப் பணிகள் தொடங்கும். மற்ற 6 இடங்களில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்றனா்.